ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 159 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஒரே நாளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2020-07-15 06:16 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,892 ஆக இருந்தது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டியை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,024 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில் அடுத்த நாளில் இதுவரை இல்லாத வகையில் 132 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என்றும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகஅளவில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. காரைக்குடியை சேர்ந்த 5 ஆண்கள், 5 பெண்கள், சிவகங்கை பகுதியை சேர்ந்த 2 பெண்கள், தென்கரையை சேர்ந்த ஒரு பெண், திருப்பத்தூரை சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண், சிங்கம்புணரியை சேர்ந்த ஒரு ஆண், மல்லாக்கோட்டையை சேர்ந்த ஒரு பெண், காட்டாம்பூரை சேர்ந்த 2 ஆண்கள், பூவந்தியை சேர்ந்த ஒரு பெண், மானாமதுரை பகுதியை சேர்ந்த 3 பெண்கள், ஒரு ஆண், தீத்தான்பட்டியை சேர்ந்த ஒரு பெண், கல்லலை சேர்ந்த ஒரு பெண், கீழப்பூங்குடியை சேர்ந்த ஒரு ஆண் உள்பட 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுதவிர ஏற்கனவே சிகிச்சையில் இருந்த மானாமதுரையை அடுத்த ராஜகம்பீரத்தை சேர்ந்த 60 வயது முதியவர், இளையான்குடி பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவர், திருப்பத்தூரை சேர்ந்த 65 வயது முதியவர் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்