ஜான் பாண்டியன் மீது அவதூறு பரப்புவோரை கைது செய்ய வேண்டும் - போலீஸ் கமிஷனரிடம், த.ம.மு.க.வினர் மனு
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கமிஷனர் தீபக் டாமோரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை,
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் தலைவர் ஜான்பாண்டியன் குறித்து இணையதள முகநூலில், அவதூறாகவும், கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி வடிவமைத்து தவறாக பரப்பி உள்ளனர். இந்த செயல் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. கட்சி தொண்டர்கள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. பாலா குடும்பர் என்ற முகவரியில் பரப்பிய இந்த அவதூறு செய்திகள் பொது அமைதியை சீர்குலைக்கும், கலவரத்தை ஏற்படுத்தும் என்ற நோக்கில் வெளியிடப்பட்டு உள்ளது. தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு செய்து உள்ளனர். இவ்வாறு பொய் தகவலையும், அவதூறையும் பரப்பியவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். ஜான் பாண்டியனுக்கு உரிய பாதுகாப்பும் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், போக்குவரத்து கழக செயலாளர் மகேந்திரன், மாநகர மாவட்ட செயலாளர் நாகராஜ சோழன், இணை செயலாளர் துரைப்பாண்டியன், மாணவர் அணி செயலாளர் முத்துப்பாண்டியன், தலைமை கழக ஒருங்கிணைப்பாளர் கல்குறிச்சி சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.