முதல்-அமைச்சருக்கு எதிராக தனவேலு ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டம் - பாகூரில் திடீர் பரபரப்பு

பாகூரில் முதல்-அமைச்சருக்கு எதிராக தனவேலுவின் ஆதரவாளர்கள் கருப்புக்கொடி ஏற்றி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் திடீரென அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-07-14 23:00 GMT
பாகூர், 

பாகூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் தனவேலு. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் அவரது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து பாகூரில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. மருத்துவ அதிகாரி உமாசங்கர் (பாகூர்), நாராயணன் (கிருமாம்பாக்கம்) ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். பாகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்து பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்த முகாமை பார்வையிட முதல்-அமைச்சர் நாராயணசாமி வர உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையம், மார்க்கெட் வீதி உள்ளிட்ட இடங்களில் தனவேலுவின் ஆதரவாளர்கள் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், பாகூர் இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தொகுதியின் முக்கிய சந்திப்புகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். அங்கு கட்டப்பட்டிருந்த கருப்புக்கொடிகள் அப்புறப்படுத்தப்பட்டன.

இந்தநிலையில் பாகூர் பூலோக மாரியம்மன் கோவில் அருகில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். கைகளில் கருப்புக்கொடி ஏந்தியபடி அவர்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது முதல்-அமைச்சரின் உருவ பொம்மையையும் எரிக்க முயன்றனர். அங்கிருந்த போலீசார் தடுத்து அதை பறித்தனர்.

இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து அங்கிருந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. சிறிது நேரம் கழித்து அவை திறக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட்டம் கூடியதாகவும், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தியதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்