வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த 19 பேருக்கு கொரோனா தொற்று
வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆலந்தூர்,
மத்திய அரசு ‘வந்தே பாரத்’ என்ற திட்டத்தின் மூலம் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கியவர்களை சிறப்பு விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வருகிறது. அதன்படி, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, துபாய் உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து 32,881 பேர் வந்தனர். இவர்களுக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 591 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் 269 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து, முகாமில் தங்கியிருந்தவர்களுக்கு மீண்டும் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில், வளைகுடா நாடுகளான குவைத் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த தலா 5 பேருக்கும், சவுதி ஆரேபியாவில் இருந்து வந்த 4 பேர் உள்பட 19 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 610 ஆக உயர்ந்தது.
மேலும் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்திற்கு பல்வேறு நகரங்களில் இருந்து 84 ஆயிரத்து 312 பேர் வந்து உள்ளனர். இவர்களில் மேலும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில், எண்ணிக்கை 170 ஆக உயர்ந்தது.