திருப்பூர் மாவட்டத்தில் 8 பெண்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் 8 பெண்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-07-14 22:43 GMT
திருப்பூர்,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக 3 ஆயிரம் பாதிப்பு இருந்த நிலையில், தற்போது 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 526 பேர். இதில் சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதுதவிர மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாக இருந்தது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 10 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. நேற்று மேலும் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் திருப்பூர் அனுப்பர்பாளையம் ஜீவா தெருவை சேர்ந்த 42 வயது பெண், 31 வயது பெண், 56 வயது பெண், அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 70 வயது பெண், பழங்கரையை சேர்ந்த 24 வயது ஆண், ராக்கியாபாளையம் காளியப்பாநகரை சேர்ந்த 38 வயது ஆண், காங்கேயம் நத்தக்காடையூரை சேர்ந்த 40 வயது பெண், சாமுண்டிபுரம் செல்லமணிகாலனியை சேர்ந்த 19 வயது பெண், பழங்கரையை சேர்ந்த 22 வயது பெண், உடுமலை தாராபுரம் ரோடு சிவசக்திகாலனியை சேர்ந்த 70 வயது ஆண், திருப்பூர் சொர்ணாபுரி லே அவுட்டை சேர்ந்த 63 வயது பெண், உடுமலை தீயணைப்பு நிலைய குடியிருப்பை சேர்ந்த 45 வயது ஆண் ஆகிய 12 பேர் ஆவர்.

இவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகம். 8 பெண்கள், 4 ஆண்கள் நேற்று பாதிக்கப்பட்டிருந்தனர். இதுதவிர திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மொத்தம் 62 பேர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள். 80 சதவீதம் குணமடைந்து விட்டனர். குணமடைந்து வீடு திரும்புகிறவர்களையும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்