தனியார் மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க எதிர்ப்பு - பொதுமக்கள் திடீர் மறியல்; பரபரப்பு
வில்லியனூர் அருகே தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வில்லியனூர்,
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சுமார் 400 பேரும், ஜிப்மரில் 130 பேரும் தற்போது சிகிச்சை பெறுகின்றனர்.
தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு உத்தரவின்பேரில் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வில்லியனூர் அருகே ஊசுட்டேரியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து குடியிருப்பு பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கொரோனா பாதித்த 7 பேர் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து அருகில் உள்ள கூடப்பாக்கம் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் நேற்று காலை வில்லியனூர் - பத்துக்கண்ணு சாலையில் திடீரென்று திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து வில்லியனூர் தாசில்தார் அருண்அய்யா, துணை தாசில்தார் கஜேந்திரன், மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் பழனிவேல், ஆறுமுகம் (போக்குவரத்து) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதால், தங்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வேறு இடத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் என்று தெரிவித்தனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்துசென்றனர்.