குடிநீர் வினியோகத்தை தடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை - மத்தூரில் பரபரப்பு

குடிநீர் வினியோகத்தை தடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2020-07-14 07:59 GMT
மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்டது சாணிப்பட்டி கிராமம். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்ய சற்று தொலைவில் உள்ள நிலத்தில் இருந்து ஆழ்துளை பம்ப் அமைத்து அதன் மூலமாக பல ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அந்த நிலம் தனக்கு சொந்தம் என்றும், தனக்கு சொந்தமான நிலத்தில் அரசு ஆழ்துளை கிணறு அமைத்ததை அனுமதிக்க முடியாது என்று கூறி, அதே ஊரைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகித்து வந்ததை அடிக்கடி நிறுத்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில் இதை கண்டு ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருவதாகவும், பல முறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும் இந்த பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களையும், ஊர் முக்கிய பிரமுகர்களையும் மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தை முடிவில், குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்தவர்கள் மீது மத்தூர் போலீசில் புகார் அளிக்கும்படி ஊராட்சி மன்ற தலைவரிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். மேலும் ஊராட்சி மன்றம் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.

இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்