திருச்சி மாநகர ஆயுதப்படை போலீஸ் உதவி கமிஷனர், ரெயில்வே பாதுகாப்பு படை பெண் அதிகாரிக்கு கொரோனா

திருச்சி மாநகர ஆயுதப்படை போலீஸ் உதவி கமிஷனருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் ரெயில்வே பாதுகாப்பு படை பெண் அதிகாரியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2020-07-14 05:20 GMT
திருச்சி,

திருச்சி மாநகர போலீசில் பணியாற்றும் காவலர்கள், அதிகாரிகள் ஊரடங்கு காலத்தில் சுழற்சி முறையில்பணியாற்றி வருகிறார்கள். பொதுமக்களுடன் அதிக தொடர்பில் இருப்பவர்கள் என்பதால், கொரோனா மருத்துவபரிசோதனை செய்த பின்னரே, சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட்டு வருகிறார்கள். இருப்பினும் திருச்சி மாநகரில் பணியாற்றும் துணை கமிஷனரின் டிரைவர் உள்ளிட்ட 35 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா காரணமாக, திருச்சி கே.கே.நகர் போலீஸ் குடியிருப்பு உள்ளே வெளிநபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை பிரிவில் உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றும் அதிகாரிக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. அதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர், உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதையொட்டி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள போலீஸ் உதவி கமிஷனரின் அலுவலகம் மூடப்பட்டது. நேற்று அவரது கார் டிரைவர் மற்றும் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் போலீசார் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே, மாநகர ஆயுதப்படை பிரிவு போலீசில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணி மற்றும் வழக்கமான பணிகளை மேற்கொண்டுள்ள மாநகர போலீசாருக்கென்று தரமான முக கவசங்கள் (மாஸ்க்) தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. முக கவசங்களில் ‘போலீஸ்’ என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த முக கவசங்கள் அணிவதற்கு எளிதாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாகபோலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி காஜாமலை கிம்பர் கார்டன் பகுதியில் ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கான பயிற்சி மையம் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக இந்த பயிற்சி மையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படைக்கு தேர்வு செய்யப்படும் பெண் காவலர்களுக்கும் பயிற்சி அளிக்கும் பிரிவு தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் ரெயில்வே பாதுகாப்பு படைக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்த 496 பெண்கள் இங்கு வந்து சேர்ந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கேரளா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தமிழகத்தில் இருந்து 6 பேர் மட்டுமே தேர்வாகி இருந்தனர். அவர்களுக்கு முதல் கட்ட பயிற்சி முடிந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பயிற்சியில் இருந்த அனைவரும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 1-ந்தேதி அவர்கள் மீண்டும் திருச்சிக்கு வந்தனர். கடந்த 2-ந்தேதியில் இருந்து அவர்களுக்கு மீண்டும் பயிற்சிகள் தொடங்கியது. இந்தநிலையில் இந்த பயிற்சி வகுப்பினை நடத்தும் பெண் அதிகாரிக்கு நேற்று முன்தினம் திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். பயிற்சி மையத்தில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்