கொரோனா தொற்றை தடுக்க நடத்தப்பட்ட 16 ஆயிரம் மருத்துவ முகாம் நல்ல பலனை தந்துள்ளன - அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

கொரோனா தொற்றை தடுக்க முதல்-அமைச்சர் உத்தரவுப்படி சென்னையில் நடத்தப்பட்ட 16 ஆயிரம் மருத்துவ முகாம் நல்ல பலனை தந்துள்ளன என்று அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

Update: 2020-07-14 00:36 GMT
சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சியின் 9-வது மண்டலத்தில் உள்ள டிரஸ்ட்புரம் கங்காராம் தோட்ட பகுதியில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அருகில் இருந்த சிவன் கோவில் தெருவில் உள்ள வணிகர்களிடம் முகக்கவசம் அணியாமல் கடைக்கு வருபவர்களுக்கு பொருட்கள் எதுவும் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

இதன்பின்பு டிரஸ்ட்புரம் 6-வது தெரு மற்றும் மண்டலம் 8-ல் சிவானந்தா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ பரிசோதனைகளை ஆய்வு செய்தார். அங்கு பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர் மற்றும் விழிப்புணர்வு கையேடு ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி ஒவ்வொரு நாளும் எடுக்கப்பட்டு வரும் துரிதமான, உறுதியான, தேவையான நடவடிக்கைகள் மூலம் சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் மருத்துவ முகாம் மிகப்பெரிய பலனை தந்து இருக்கிறது. இதுவரை சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 16 ஆயிரத்து 106 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதன்மூலம் 1 லட்சத்து 8 ஆயிரத்து 805 பேர் பயன் அடைந்துள்ளனர்.

இந்த முகாமின் மூலம் 50 ஆயிரத்து 730 பேருக்கு காய்ச்சல், சளி, இருமல் கண்டறியப்பட்டது. 46 ஆயிரத்து 277 பேர் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். முதல்-அமைச்சர் அறிவித்த முழு ஊரடங்கும் தொற்று குறைய காரணமாக இருந்துள்ளது. வெகு விரைவில் சென்னை மாநகராட்சியில் தொற்று இன்னும் குறைவதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மருத்துவ அலுவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுவதால் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தூய்மை பணிகள் சிறப்பாக நடைபெறுவதால் நோய் தொற்று குறைந்து வருகிறது.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டும் தான் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவற்றை விலையில்லாமல் வழங்கி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மண்டல கண்காணிப்பு அலுவலர் எஸ்.கோபால சுந்தரராஜ், துணை கமிஷனர் தர்மராஜ், மண்டல அலுவலர்கள் ஜெ.ரவிக்குமார், கே.சுந்தர்ராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்புலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்