விருத்தாசலம் தாசில்தார் உள்பட 26 பேருக்கு கொரோனா மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,547 ஆக உயர்வு

விருத்தாசலம் தாசில்தார் உள்பட 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2020-07-14 00:06 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் தாசில்தார் உள்பட 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,547 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1521 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 1093 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று சிலரது உமிழ்நீர் பரிசோதனை முடிவு வந்தது. இதில் விருத்தாசலம் தாசில்தார் உள்பட 26 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

விருத்தாசலம் தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் கவியரசு. இவர் கடந்த மார்ச் மாதம் முதல் விருத்தாசலம் பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து விருத்தாசலம் பகுதிக்கு வருபவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துதல் பணியிலும், கொரோனா பாதித்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.

டாக்டர்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாசில்தார் கவியரசுவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து, கொரோனா நோய் தொற்றுக்காக பரிசோதனை செய்து கொண்டார். இதன் பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தனக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்த தகவலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதை பார்த்த பொதுமக்கள் அவர் விரைந்து குணமடைய விருப்பம் தெரிவித்தனர். இதேபோல் சென்னையில் இருந்து கடலூர் திரும்பிய 2 செவிலியர்களுக்கும், மங்களூர், நெய்வேலி பகுதியை சேர்ந்த 4 செவிலியர்களுக்கும், சிதம்பரம் பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர், பண்ருட்டியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர், மருத்துவமனை ஊழியர் 2 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

1,547 ஆக உயர்வு

இதுதவிர சென்னையில் இருந்து காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் வந்த 2 பேர், சேலத்தில் இருந்து என்.எல்.சி. குடியிருப்புக்கு வந்த ஒருவர், பெங்களூருவில் இருந்து மங்களூர் வந்த ஒருவர், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த கர்ப்பிணி, சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 4 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த கடலூர், அண்ணாகிராமம், புவனகிரி, விருத்தாசலம், வடலூர் பகுதியை சேர்ந்த 7 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,547 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 694 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்