வேலூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 3,500 படுக்கைகள் தயார் கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 3,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-13 23:30 GMT
காட்பாடி, 

வேலூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 3,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

ஆய்வு

வேலூர் மாவட்டத்தில் அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க காட்பாடியில் உள்ள வி.ஐ.டி.யில் தற்காலிகமாக கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதை, கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்போது வரை 3,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. பரிசோதனை மேற்கொள்வதில் தமிழகத்திலேயே வேலூர் 5-வது இடத்தில் உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரேஷன் கடை, டாஸ்மாக் கடை, வங்கி ஊழியர்களுக்கும் அந்தப் பகுதி மக்களுக்கும் சிறப்பு முகாம் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூரில் அதிக சோதனை செய்வதால் அதிக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநில அளவில் இறப்பு சதவீதம் மிகக் குறைவாக உள்ளது.

தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது

வேலூரில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. தற்போது குடியாத்தம் நகராட்சி சவாலாக மாறி உள்ளது. அதேபோல் பள்ளிகொண்டாவில் ஒரு மருந்தகத்துக்கு வந்து சென்றவர்களில் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 2 கடைகளை மூட உத்தரவிட்டுள்ளேன். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களும் மாலையில் அந்தப் பகுதிகளில் உள்ள பொது மக்களை பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின்போது வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், காட்பாடி தாசில்தார் பாலமுருகன், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு துரை பாண்டியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்