பல்லடம் வாரச்சந்தை செயல்பட நடவடிக்கை; வியாபாரிகள் கோரிக்கை

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் பல்லடம் வாரச்சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-07-13 22:31 GMT
பல்லடம்,

பல்லடம் பஸ் நிலையம் பின்புறம் வாரச்சந்தை அமைந்துள்ளது. இங்கு 500 கடைகளும், சாலையில் 300 கடைகளும் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த சந்தை வாரம் தோறும் திங்கட்கிழமையில் கூடும்.

இந்த சந்தைக்கு பல்லடம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து காய்கறிகள், மளிகை பொருட்கள், விவசாய தளவாடகருவிகள் போன்றவைகளை வாங்கிச்செல்வர்.

வாரச்சந்தைநாட்களில் என்.ஜி.ஆர்.ரோட்டில் வாகனபோக்குவரத்து தடை செய்யப்படும். அந்த அளவிற்கு கூட்டம் கூடும்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் வாரசந்தை செயல்படவில்லை. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது பற்றி மிளகாய் மொத்த வியாபாரி லட்சுமணன் கூறும்போது “வாரச்சந்தை நாட்களில் ரூ. 30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை விற்பனை நடைபெறும். வாரச்சந்தை செயல்படாமல் உள்ளதால், வியாபாரிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.

பழவியாபாரி வெள்ளிங்கிரி கூறும்போது “ வாரச்சந்தை நடைபெறாமல் உள்ளதால் எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாரச்சந்தை செயல்பட்டால் தான் எங்களுக்கு வாழ்க்கை கிடைக்கும். விரைவில் இந்த வாரச்சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள்