தென்காசி மாவட்டத்தில் 93 இடங்களில் சி.ஐ.டி.யு. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டத்தில் 93 இடங்களில் சி.ஐ.டி.யு. சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2020-07-13 22:30 GMT
தென்காசி, 

தென்காசி மாவட்டத்தில் 93 இடங்களில் சி.ஐ.டி.யு. சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் சமீபத்தில் மனு கொடுக்க சென்றனர். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் நேரடியாக மனு கொடுக்க வரவேண்டாம் என்றும் கலெக்டர் அலுவலக இமெயில் அல்லது வாட்ஸ்அப் எண்ணுக்கு மனுக்களை அனுப்ப வேண்டுமென்றும் மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் அங்கு சென்றபோது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், சி.ஐ.டி.யு. நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் சி.ஐ.டி.யு. நிர்வாகிகளை தவறாக பேசியதாக கூறி அதனை கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோஷங்கள் எழுப்பினர்

தென்காசி தினசரி சந்தை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பீடி தொழிலாளர்கள் சங்க தாலுகா செயலாளர் குருசாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் அயூப்கான் மற்றும் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் கிருஷ்ணன், வள்ளிநாயகம், தாணு மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தென்காசியில் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் சிவகிரி, வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர், செங்கோட்டை, ஆலங்குளம், கீழப்பாவூர், பாவூர்சத்திரம் உள்பட 93 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கட்சி கொடி ஏந்தி, முக கவசம் அணிந்திருந்தனர். சமூக இடைவெளி விட்டு நின்று, போலீஸ் அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்