நாகர்கோவில் கால்நடை துணை இயக்குனர் அலுவலக ஊழியருக்கு கொரோனா ஆஸ்பத்திரி மூடப்பட்டது
நாகர்கோவில் கால்நடை துணை இயக்குனர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, கால்நடை ஆஸ்பத்திரியும் மூடப்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் கால்நடை துணை இயக்குனர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, கால்நடை ஆஸ்பத்திரியும் மூடப்பட்டது.
கொரோனா பரிசோதனை
நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் கால்நடை துணை இயக்குனர் அலுவலகம், உதவி இயக்குனர் அலுவலகம், கால்நடை ஆஸ்பத்திரி ஆகியவை செயல்பட்டு வருகிறது. இதில் கால்நடை துணை இயக்குனர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் பாதிப்பு காரணமாக தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பரிசோதனை மையத்தில் கொரோனா பரிசோதனை செய்தார்.
கிருமி நாசினி தெளிப்பு
இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கால்நடை துணை இயக்குனர் அலுவலக உதவியாளரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் நேற்று காலை நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள கால்நடை துணை இயக்குனர் அலுவலகம், உதவி இயக்குனர் அலுவலகம், ஆஸ்பத்திரி ஆகிய பகுதி, சுற்றுப் பகுதிகள் அனைத்திலும் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின்பேரில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
240 பேர் பாதிப்பு
இதையடுத்து கால்நடை ஆஸ்பத்திரி, துணை இயக்குனர் அலுவலகம், உதவி இயக்குனர் அலுவலகம் ஆகியவை 3 நாட்களுக்கு பூட்டப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்கள், குடும்பத்தினர், அலுவலகத்தில் பணியாற்றியவர்கள் குறித்த பட்டியலை தயார் செய்யும் பணியில் சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை தலைமையிலான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 5 நாட்கள் கழித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி நகர்நல அதிகாரி கின்ஷால் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நேற்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும், இதுவரை நாகர்கோவில் நகரப்பகுதியில் 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.