சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் சுப்பராயன் எம்.பி. வலியுறுத்தல்
சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சுப்பராயன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
சாத்தான்குளம்,
சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சுப்பராயன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
குடும்பத்திற்கு ஆறுதல்
சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு அடுத்தடுத்து இறந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளரும், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பராயன் நேற்று சாத்தான்குளம் வந்தார். பின்னர் அவர், ஜெயராஜ் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் காவல்துறையினர் சட்டவிரோதமாக செயல்பட்டு தந்தை, மகன் என இருவரையும் இரட்டை கொலை செய்துள்ளனர். அவர்கள் வரலாறு காணாத வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியான போலீஸ் ஏட்டு ரேவதிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு ஆகும். அவரது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தமிழக அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும். அவருக்கு முழு பாதுகாப்பு வழங்குவதுடன் பதவி உயர்வும் வழங்க வேண்டும்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
இந்த வழக்கில் தற்போது சி.பி.ஐ. விசாரணை நடந்த வருகிறது. அது எப்படி செல்லும் என்பது தெரியாது. இதில் அரசியல் தலையீடு வருமா? என்பதையும் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
சட்டத்தில் உள்ள ஓட்டை வழியாக குற்றவாளிகள் யாரும் தப்பித்து விடக்கூடாது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கோரிக்கையாகும். அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி துணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அழகு முத்து பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் கரும்பன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் மணி, மாவட்ட பொது செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட செயலாளர் ஆண்டி, ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ் (சாத்தான்குளம்), விஜயகுமார் (ஆழ்வார்திருநகரி), சாத்தான்குளம் நகர செயலாளர் ராஜகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.