சாத்தூர் அருகே கூலித்தொழிலாளி வெட்டிக் கொலை

சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில் கூலித்தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2020-07-13 03:52 GMT
சாத்தூர்,

சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 48). விறகு வெட்டும் கூலித் தொழிலாளி. இவரும், அதே ஊரைச் சேர்ந்த முனியசாமி (50) என்பவரும் விறகு வெட்டும் கூலித் தொழில் செய்து வந்தனர்.

விறகு வெட்டும் தொழிலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் முனியசாமி குடிபோதையில் வெங்கடாசலபதியின் வீட்டுக்குச் சென்றார். அங்கு வீட்டு வாசலில் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த வெங்கடாசலபதியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். உடனே அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவியும், மகளும் வெளியே ஓடி வந்து முனியசாமியை தடுத்தனர். இதில் அவர்களுக்கும் கையில் வெட்டுக் காயம் விழுந்தது.

அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த வெங்கடாசலபதி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து முனியசாமியை விரட்டி சென்று மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்து சாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபகுமார் வழக்குப் பதிவு செய்து முனியசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

கூலித்தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்