திண்டுக்கல் மாவட்டத்தின் முதல் பெண் போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு

திண்டுக்கல் மாவட்டத்தின் முதல் பெண் போலீஸ் சூப்பிரண்டாக ரவளிபிரியா பதவியேற்றார்.

Update: 2020-07-13 00:38 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய சக்திவேல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை மாதவரம் துணை கமிஷனர் ரவளிபிரியா, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய போலீஸ் சூப்பிரண்டாக ரவளிபிரியா நேற்று பதவி ஏற்றார். இவர், கடந்த 2016-ம் ஆண்டு திண்டுக்கல்லில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பயிற்சி பெற்றார். இதையடுத்து காஞ்சீபுரம், வண்ணாரபேட்டை ஆகிய பகுதிகளிலும், பின்னர் மாதவரம் துணை கமிஷனராக பணியாற்றி விட்டு, திண்டுக்கல்லுக்கு வந்துள்ளார். புதிதாக பதவி ஏற்றுள்ள போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, திண்டுக்கல் மாவட்டத்தின் முதல் பெண் போலீஸ் சூப்பிரண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பதவி ஏற்ற முதல் நாளான நேற்று, முழு ஊரடங்கு ஆகும். இதனால் காலை 7 மணிக்கே பதவி ஏற்றுக்கொண்டு மரியாதை நிமித்தமாக உயர் அதிகாரிகளை சந்தித்தார். மேலும் உடனடியாக ஊரடங்கு கண்காணிப்பு பணியை அவர் ஆய்வு செய்தார்.

இவர் தவிர, ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி, மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாவட்ட வன அலுவலர் வித்யா, தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் அம்பிகா ஆகியோர் உள்பட மாவட்டத்தின் முக்கிய பொறுப்புகளில் பெண் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் முதன்முறையாக பெண் போலீஸ் சூப்பிரண்டாக ரவளிபிரியா பதவியேற்று இருப்பது சிறப்பம்சமாக உள்ளது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தை ஆட்சி செய்யும் அனைத்து முக்கிய பதவிகளிலும் பெண் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இதனால் கிராமங்கள் நிறைந்த திண்டுக்கல் மாவட்டம், வளர்ச்சியின் மற்றொரு தளத்துக்கு முன்னேற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

மேலும் செய்திகள்