அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு போலீஸ் கட்டுப்பாட்டில் விழுப்புரம் பெரிய காலனி பகுதி வீடு, வீடாக சுகாதார துறையினர் மருத்துவ பரிசோதனை செய்தனர்

விழுப்புரம் பெரிய காலனி பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் அந்த பகுதி கொண்டு வரப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

Update: 2020-07-13 00:30 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் பெரிய காலனி பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் அந்த பகுதி கொண்டு வரப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும் அங்கு வீடு வீடாக சென்று சுகாதார துறையினர் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

வேகமெடுக்கும் கொரோனா

உலகையே கொரோனா கலங்கடித்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வருவதுடன், மறுபுறம் தினசரி ஒருவரின் உயிரையும் கொரோனா தனது கோரபிடியால் பறித்து சென்று வருகிறது. இந்த தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இது ஒரு புறம் இருக்க தற்போது, விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பெரியகாலனி பகுதியில் மட்டுமே கொரோனாவின் பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. தற்சமயம் வரைக்கும் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பைக்கு எப்படி ஒரு தாராவியோ, அதுபோன்று விழுப்புரத்துக்கு இந்த பெரியகாலனி என்கிற அளவுக்கு மாறிவிட்டது.

நகர பகுதிக்குள் வர தடை

குறுகலான தெரு, அடர்த்தியான பகுதியில் அதிகளவில் வசிக்கும் மக்கள் போன்ற காரணங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் இப்பகுதியை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். அப்போது இந்த பகுதியினர் நகர பகுதிக்குள் வருவதற்கு தடை விதித்தார். இதையடுத்து அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பெரியகாலனி பகுதிக்குள் செல்லும் அனைத்து வழிப்பாதைகளிலும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு பணிக்கு 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவ பரிசோதனை

இந்த நிலையில் நேற்று மாவட்ட சுகாதாரதுறை சார்பில் வீடு வீடாக மருத்துவகுழுவினர் சென்று அப்பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் சம்பந்தமான பரிசோதனை நடத்தபட்டது. நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒலிபெருக்கி வாகனத்தின் மூலம் கொரோனா தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. மேலும் அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தேவையான தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்