கடலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக பலத்த மழை மரங்கள் வேரோடு சாய்ந்தன

கடலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

Update: 2020-07-12 23:50 GMT
பண்ருட்டி, 

கடலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இடி-மின்னலுடன் மழை

அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தணிந்தபாடு இல்லை. இதற்கிடையே வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது.

அந்த வகையில் கடலூர், வடலூர், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், மே.மாத்தூர், வேப்பூர், தொழுதூர், சிதம்பரம், விருத்தாசலம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது.

பண்ருட்டி பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் பண்ருட்டி பணிக்கன்குப்பம் அரசு பொறியியல் கல்லூரி எதிரே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 300 மூட்டை பெரிய வெங்காயம் மற்றும் காய்கறி பொருட்கள் மழைநீரில் நனைந்து போனது. இதையடுத்து வியாபாரிகள் மழைநீரில் நனைந்த வெங்காயத்தை வெயிலில் கொட்டி உலர வைத்தனர். மேலும் இந்த மழையால் தாழம்பட்டு கிராமத்தில் இருந்த 3 மரங்கள் வேரோடு சாய்ந்தன.

2-வது நாளாக...

தொடர்ந்து நேற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர் உள்பட 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடலூர் மாவட்டம் விருத்தாசலம், மந்தாரக்குப்பம் பகுதியில் நேற்று 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. மாலை 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழையானது இரவு 7.15 வரை விட்டு விட்டு பலத்த மழையாக கொட்டியது. இதனால் சாலைகள், தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் செய்திகள்