பொம்மனஹள்ளி மண்டலத்தில் அனைத்து வார்டுகளுக்கும் தலா ஒரு ஆம்புலன்ஸ் மந்திரி சுரேஷ்குமார் தகவல்

பொம்மனஹள்ளி மண்டலத்தில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் தலா ஒரு ஆம்புலன்ஸ் வழங்கப்படும் என்று மந்திரி சுரேஷ்குமார் கூறியுள்ளார்.

Update: 2020-07-12 22:30 GMT
பெங்களூரு, 

பொம்மனஹள்ளி மண்டலத்தில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் தலா ஒரு ஆம்புலன்ஸ் வழங்கப்படும் என்று மந்திரி சுரேஷ்குமார் கூறியுள்ளார்.

படுக்கைகளை ஒதுக்க...

பெங்களூரு பொம்மனஹள்ளி மண்டல கொரோனா தடுப்பு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், நேற்று பொம்மனஹள்ளியில் உள்ள மாநகராட்சி இணை கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் மந்திரி சுரேஷ்குமார் பேசும்போது கூறியதாவது:-

தற்போது கொரோனா பரிசோதனை முடிவு வர 4 முதல் 5 நாட்கள் ஆகிறது.

இனி ஒரே நாளில் கொரோனா பரிசோதனை முடிவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனைகள் அரசுக்கு அளித்த உறுதிமொழிப்படி 50 சதவீத படுக்கைகளை ஒதுக்காமல் இருப்பது சரியல்ல. அந்த மருத்துவமனைகளில் உடனடியாக படுக்கைகளை ஒதுக்க வேண்டும்.

ஆம்புலன்ஸ் வாகனம்

50 சதவீத படுக்கைகளை ஒதுக்க தவறும் பட்சத்தில் அத்தகைய தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொம்மனஹள்ளி மண்டலத்தில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் தலா ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்படும்.

இவ்வாறு சுரேஷ்குமார் பேசினார்.

இந்த கூட்டத்தில் தேஜஸ்வி சூர்யா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எம்.கிருஷ்ணப்பா, சதீஸ்ரெட்டி, ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவண்ணன், மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்