பசவசாகர் அணையில் இருந்து 28 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு கிருஷ்ணா கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், பசவசாகர் அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக 28 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
யாதகிரி,
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், பசவசாகர் அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக 28 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணா நதியின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத சேதம்
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தில் பெங்களூரு, குடகு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதேபோல, மராட்டிய எல்லையில் உள்ள பெலகாவி, யாதகிரி மாவட்டங்களிலும், மராட்டிய மாநிலத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன்காரணமாக, மராட்டியத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அந்த தண்ணீர் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு வந்தடைந்துள்ளது. கடந்த ஆண்டும் பெய்த பலத்த மழையால், கொய்னா அணை முன்அறிவிப்பு இன்றி திறக்கப்பட்டதால், மராட்டியத்தையொட்டி உள்ள வடகர்நாடக பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. வடகர்நாடகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்தன. இதனால் வடகர்நாடக மாவட்டங்கள் வரலாறு காணாத சேதங்களை சந்தித்தன.
நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் முத்தேபிகால் தாலுகா சித்தாப்புரா பகுதியில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே பசவசாகர் அணை அமைந்துள்ளது. இது நாராயணபுரா அணை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், மராட்டியத்தில் பெய்து வரும் கனமழையால், கொய்னா அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பசவசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி கடல் மட்டத்தில் இருந்து 1,615 அடி கொள்ளளவு கொண்ட அணையில், 1,609.20 அடி தண்ணீர் உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 26.14 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) ஆகும். தற்போது அணையில் 18.56 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.
தண்ணீர் திறப்பு
பசவசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று பசவசாகர் அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. அதாவது 4 மதகுகள் வழியாக அணையில் இருந்து வினாடிக்கு 28,480 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்காரணமாக கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மேலும் கிருஷ்ணா கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஜூலை 2-வது வாரத்திலேயே அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுமோ? என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.