முக கவசம் அணியாதவர்களுக்கு பொருட்கள் தரக் கூடாது கடைக்காரர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்கள் தர வேண்டாம் என்று கடைக் காரர்களை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.
திருபுவனை,
முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்கள் தர வேண்டாம் என்று கடைக் காரர்களை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம் வணிகர்கள் நலச்சங்கத்தின் கீழ் செயல்படும் அனைத்து வியாபார கடைகளின் உரிமையாளர்களை அழைத்து கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்துக்கு மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் தலைமை தாங்கி, பேசியதாவது:-
மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம், திருபுவனை, திருவண்டார்கோவில் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு பொருட் களை வாங்க வரும் வாடிக்கையாளர்களை கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கச் செய்யவேண்டும். முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு எந்த ஒரு பொருளையும் கொடுக்கக் கூடாது.
மக்கள் கையில்...
கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். தொற்று பரவலை தடுப்பது மக்களின் கையில் தான் உள்ளது. சிலரின் கவனக்குறைவால் தற்போது கொரோனா அதிக அளவில் பரவி வருவது வேதனையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார், கலிதீர்த்தாள்குப்பம், மதகடிப்பட்டு வணிகர்கள் நலச்சங்க தலைவர் ஜெயக்குமார், துணைத்தலைவர் அருள்வாணன், செயலாளர் துரைமணி, பொருளாளர் ராமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.