குமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் ரூ.3 ஆயிரம் கோடியில் தடுப்பு சுவர் வசந்தகுமார் எம்.பி. வலியுறுத்தல்

குமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் ரூ.3 ஆயிரம் கோடியில் தடுப்பு சுவர் கட்ட மத்திய அரசை வசந்தகுமார் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-07-12 22:30 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் ரூ.3 ஆயிரம் கோடியில் தடுப்பு சுவர் கட்ட மத்திய அரசை வசந்தகுமார் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விமான தளம்

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. இந்த நிலையில் நாடாளுமன்றம் 3 முறை கூடியிருக்கிறது. கூட்டத்தில் அதிகமான கேள்விகளையும், தனி நபர் தீர்மானங்களையும், குமரி மாவட்ட வளர்ச்சி பற்றியும் பேசியிருக்கிறேன். அதற்கு அத்தாட்சியாக சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.

குமரி மாவட்ட மக்கள் இப்போது முக்கியமாக நினைப்பது ஒரு விமான தளம். அதற்காக பெங்களூருவில் உள்ள ஒரு முக்கிய நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு சாமிதோப்பு பகுதியில் விமான தளம் கொண்டு வர ஆய்வு மேற்கொண்டு மத்திய அரசிடம் ஒப்புதலுக்கு கொடுத்திருக்கிறேன்.

மீனவர்கள் மீட்பு

மீனவர் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன். அதே சமயம் ஈரானில் தவித்து கொண்டிருந்த மீனவர்களை மீட்க பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து அவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்தேன். மேலும் நாடாளுமன்றத்தில் பலமுறை பேசி மீனவர்களை மீட்டு வந்துள்ளேன். 65 மீனவர்கள் தவிர அத்தனை பேரும் குமரி மாவட்டம் வந்தடைந்தனர்.

மூன்று ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் இருந்த தேசிய நெடுஞ்சாலையை மத்திய மந்திரி நிதின் கட்காரி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகரிடம் முறையிட்டேன். அந்த பணி தற்போது 80 சதவீதம் முடிவடைந்து விட்டது. களியக்காவிளை முதல் காவல் கிணறு வரை நடைபெறும் நான்கு வழி சாலையை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டேன் அதிலும் 80 சதவீதம் பணி முடிவடைந்துள்ளது. குளங்களை அழிக்காமல் குளங்களுக்கு மேலே பாலம் போடுவதற்கு மத்திய மந்திரி மற்றும் நாடாளுமன்றத்தில் பேசி கூடுதலாக ரூ.550 கோடி நிதி ஒதுக்க செய்துள்ளேன். நான்கு வழி சாலையின் மொத்த மதிப்பு ரூ.1,700 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டு, அந்த பணி நடந்து கொண்டிருக்கிறது.

ரூ.3 ஆயிரம் கோடி

குமரி மாவட்டத்தில் தேன் ஆராய்ச்சிநிலையம் அமைக்க வலியுறுத்தி உள்ளேன். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையாக மாற்ற நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி உள்ளேன்.

இதேபோல் குமரி மாவட்டத்தில் அனைத்து கடற்கரை கிராமங்களிலும் தடுப்பு சுவர் கட்ட ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்க வலியுறுத்தி உள்ளேன். படித்த இளைஞர்களுக்கு எனது சொந்த முயற்சியால் வேலை வாய்ப்பினை உருவாக்கி கொடுக்கிறேன். விவசாயிகளின் பிரச்சினையை மத்திய-மாநில அரசுகளிடம் பேசியிருக்கிறேன். எனக்கு மக்கள் தந்த வாய்ப்பை நான் சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறேன். உங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சந்திப்பில் உள்ள எனது அலுவலகம் மற்றும் மார்த்தாண்டம் வடக்கு தெருவில் உள்ள அலுவலகத்தில் என்னை நேரடியாக சந்தித்து உங்கள் குறைகளை சொல்லலாம் என கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு வசந்தகுமார் எம்.பி. அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்