தளர்வுகள் இல்லாத 2-வது ஞாயிற்றுக்கிழமை: முழு ஊரடங்கால் முடங்கியது குமரி மாவட்டம்
கொரோனா பரவலை தடுக்க நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கால் குமரி மாவட்டம் முடங்கியது. சாலைகள், தெருக்கள் வெறிச்சோடின.
நாகர்கோவில்,
கொரோனா பரவலை தடுக்க நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கால் குமரி மாவட்டம் முடங்கியது. சாலைகள், தெருக்கள் வெறிச்சோடின.
குமரியில் முழு ஊரடங்கு
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. அதை கட்டுப்படுத்த தமிழக அரசு 6-வது முறையாக கடந்த 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டது. அத்துடன் ஜூலை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்த விதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
அதன்படி கடந்த 5-ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நேற்று 2-வது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, நேற்று முழு ஊரடங்கால் குமரி மாவட்டமே முடங்கியது.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒவ்வொரு வீட்டில் இருந்தும் இறைச்சி மற்றும் மீன் வாங்க செல்வார்கள். இதனால் இறைச்சி கடைகள் கூட்டத்தால் நிரம்பி இருக்கும். நேற்று ஊரடங்கால் அவை மூடப்பட்டன. மேலும் மளிகைக்கடை, ஓட்டல்கள், டீக்கடைகள், சந்தைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. ஆவின் பாலகம் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே திறந்து இருந்தன.
நாகர்கோவிலில் கேப் ரோடு, மீனாட்சிபுரம், மணிமேடை பகுதி, வடசேரி, கோட்டார் உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டன. சாலைகளிலும் ஒன்றிரண்டு வாகனங்களே சென்றன. சாலையில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மார்த்தாண்டம்
குமரி மாவட்டத்தின் 2-வது பெரிய நகரமான மார்த்தாண்டத்திலும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதையொட்டி கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும், எப்போதும் பரபரப்பாக காணப்படும் காய்கறி சந்தை, மீன்சந்தை மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் கடைகள் மூடி இருந்தது. மார்த்தாண்டம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாகனத்தில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்தவர்களை மட்டும் அனுமதித்தனர். மற்றவர்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.
குளச்சல்
குளச்சல் நகராட்சி பகுதியிலும் அனைத்து கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன. சாலையில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அத்தியாவசிய தேவைக்காக பால் விற்பனை நிலையங்கள், மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.
மேலும், சுற்றுவட்டார பகுதிகளான லட்சுமிபுரம், உடையார்விளை, கடலோர கிராமங்களான ரீத்தாபுரம், குறும்பனை, வாணியக்குடி, கோடிமுனை, சைமன்காலனி, மண்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. அவசியமின்றி சாலைகளில் சுற்றித்திரிபவர்களை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
பத்மநாபபுரம்
பத்மநாபபுரம் நகராட்சி பகுதியிலும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. எப்போதும் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்கள் செல்லும் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. தக்கலையில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டன. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்கள் காபி, டீ கூட வாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
கன்னியாகுமரி
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதனால் கன்னியாகுமரியில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. காலையில் இருந்து இரவு வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடுங்கி கிடந்தனர். போலீசார் நகர் முழுவதும் சுற்றி வந்தனர். கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு உள்பட பல இடங்களில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள அனைத்து கடைகள், ஓட்டல்கள் மூடி கிடந்தன. போலீசார் ஆரல்வாய்மொழி பகுதிக்கு உட்பட்ட செண்பகராமன்புதூர், தோவாளை, வெள்ளமடம், மாதவலாயம், அனந்தபத்மநாபபுரம் உள்ளிட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர். கொரோனா அச்சம் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.
தோவாளை பூ மார்க்கெட் மூடப்பட்டதால் வியாபாரம் நடை பெறவில்லை. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து பூக்கள் மார்க்கெட்டுக்கு வரவில்லை.
இதே போல் அருமனை பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. தொற்றால் பாதிக்கப்பட்ட தெற்றிவிளை மாத்தூர்கோணம், மேலத்தெரு, ஆர்.சி.தெரு, சூட்டூர்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியதால் சாலைகள், தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதேபோல், கொல்லங்கோடு, திருவட்டார், குலசேகரம், திற்பரப்பு, களியல், பொன்மனை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியிலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு அத்தியாவசிய தேவையின்றி வாகனத்தில் சுற்றித்திரிபவர்களை எச்சரித்து அனுப்பினர்.
திங்கள்சந்தை, வில்லுக்குறி, இரணியல், பேயன்குழி, இறச்சகுளம், திட்டுவிளை, பூதப்பாண்டி, தெரிசனங்கோப்பு, அருமநல்லூர் உள்ளிட்ட பகுதியிலும் மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் மற்றும் அத்தியாவசியமான காய்கறி சந்தைகளும் அடைக்கப்பட்டன. ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரி கடைகள் மற்றும் சாலையோர கடைகளும் மூடப்பட்டிருந்தன. சாலையில் வாகனங்கள் செல்வது மிக குறைவாக இருந்தது. மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின.
தீவிர கண்காணிப்பு
முழு ஊரடங்கை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். குமரி மாவட்டத்துக்குள் இ-பாஸ் எடுத்து வந்த வாகனங்கள் மட்டும் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவை மீறும் வகையில் யாரேனும் அவசியமின்றி வெளியே சுற்றி திரிகிறார்களா என்பதை கண்காணிக்க போலீசார் வாகன ரோந்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தின் முக்கிய சாலைகள், சந்திப்புகள், மலையோர மற்றும் கடற்கரை கிராமங்களில் போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். மாவட்டம் முழுவதிலும் அவசியமின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புற மக்களும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர்.