அரியலூர் கலெக்டர், சார்பதிவாளர் அலுவலகங்கள் மூடல்

தம்பதியான பெண் சார்பதிவாளர்- களப்பணியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அரியலூர் மாவட்ட கலெக்டர், சார்பதிவாளர் அலுவலகங்கள் மூடப்பட்டு ஊழியர்கள், பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-07-12 01:31 GMT
அரியலூர்,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் அரியலூர் மாவட்டத்தில் அதிக அளவில் வந்துவிடக்கூடாது என மாவட்ட கலெக்டர் ரத்னா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்ட கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் களப்பணியாளரான 32 வயதுடைய ஒருவருக்கும், அவரது மனைவியான மாவட்ட பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் 30 வயதுடைய சார்பதிவாளருக்கும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்கள் 2 பேருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் களப்பணியாளர் பங்கேற்றுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று முதல் 3 நாட்களுக்கு அரியலூர் கலெக்டர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று வெளியேற்றப்பட்டனர். மேலும் கலெக்டர் அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முழுவதையும் நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் துப்புரவு ஆய்வாளர் முத்து முகமது தலைமையில் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தனர். இதேபோல் மாவட்ட பத்திரப்பதிவுத்துறை அலுவலகமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. இதனால் பத்திரப்பதிவுகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் வசிக்கும் வாலாஜாநகரம் ராஜீவ்நகர் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து 500-ஐ தொட்டுள்ள நிலையில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்