சோளிங்கரில் கொரோனா தொற்று பரிசோதனை முகாம் கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு
சோளிங்கர் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று இலவச பரிசோதனை முகாம் நடந்தது.
சோளிங்கர்,
சோளிங்கர் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பேரூராட்சி 4-வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு கொரோனா தொற்று இலவச பரிசோதனை முகாம் நடந்தது.
அந்த முகாமை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி திடீரெனப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர், முகாமில் இதுவரை எத்தனை பேர் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டனர். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும், சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும், கொரோனா தொற்று இலவச பரிசோதனை முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும், அவ்வாறு செய்தால் தான் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.
ஆய்வின்போது தாசில்தார் பாஸ்கரன், வட்டார மருத்துவ அலுவலர் சுமதி, துப்புரவு ஆய்வாளர் வடிவேல், வருவாய் ஆய்வாளர் யுவராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர். முகாமில் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.