மொத்த பாதிப்பு 53 ஆயிரத்தை கடந்தது தானே மாவட்டத்தில் ஒரே நாளில் 2,232 பேருக்கு கொரோனா முழு ஊரடங்கு 19-ந் தேதி வரை நீட்டிப்பு
தானே மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 2,232 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தானே,
தானே மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 2,232 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் நோய் பாதிப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்தது. தீவிர நோய் பரவல் காரணமாக மாவட்டத்தில் முழு ஊரடங்கு வருகிற 19-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் மராட்டியத்தில் தலைநகர் மும்பைக்கு அடுத்தபடியாக தானே மாவட்டத்தில் அதிகமானோர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 232 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தானே மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 152 ஆக அதிகரித்தது.
இத்துடன் நேற்று மட்டும் இந்த மாவட்டத்தில் கொரோனாவுக்கு 53 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இங்கு இந்த நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,560 ஆக உயர்ந்துள்ளது.
முழு ஊரடங்கு நீட்டிப்பு
இதற்கிடையே, மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டு இருந்த முழுஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து தீவிர வைரஸ் பரவல் காரணமாக மாவட்டத்தில் முழுஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது வருகிற 19-ந் தேதி வரை நீட்டித்து மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நர்வேகர் உத்தரவிட்டுள்ளார். தானே மாவட்டத்தின் உல்லாஸ்நகர் மாநகராட்சி பகுதியில் முழு ஊரடங்கை வருகிற 22-ந் தேதி வரை நீட்டித்து மாநகராட்சி கமிஷனர் ராஜா தயாநிதி உத்தரவு பிறப்பித்துள்ளார். தானே நகரில் ஏற்கனவே முழுஊரடங்கை வருகிற 19-ந் தேதி வரை நீட்டித்து மாநகராட்சி கமிஷனர் கணேஷ் தேஷ்முக் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.