எம்.எல்.ஏ. பதவி பறிப்பை கண்டித்து தனவேலு ஆதரவாளர்கள் திடீர் போராட்டம்; பாகூர் தொகுதியில் கடைகள் அடைப்பு

தனவேலு எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-11 23:00 GMT
பாகூர்,

தனவேலு எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகூர் தொகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. முதல்- அமைச்சரின் உருவ பொம்மைகளை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

எம்.எல்.ஏ. பதவி பறிப்பு

புதுவை மாநிலம் பாகூர் தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தனவேலு. ஆளும் கட்சியில் இருந்து கொண்டே அரசுக்கு எதிராக விமர்சித்து வந்தார். கவர்னர் கிரண்பெடியை சந்தித்து அமைச்சர்கள் மீது புகார் பட்டியல் கொடுத்தார். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.

அதன்படி தனவேலு கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அவரிடம் இருந்து பாப்ஸ்கோ தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்தநிலையில் அரசு கொறடாவான அனந்தராமன் சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் தனவேலுவை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தார். இந்த மனு மீதான நடவடிக்கைக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் தனவேலு வழக்கு தொடர்ந்தார். இதில் அவர் தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கடைகள் அடைப்பு

இந்தநிலையில் பலமுறை சபாநாயகரை தனவேலு சந்தித்தார். இதையொட்டி நேற்று முன்தினம் தனவேலு எம்.எல்.ஏ.வின் பதவியை பறித்து சபாநாயகர் சிவக்கொழுந்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் பாகூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் தனவேலு ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்று காலை அவரது வீட்டுக்கு ஏராளமானோர் சென்று ஆதரவு தெரிவித்ததுடன் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதவி பறிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகூர் தொகுதி முழுவதும் கருப்புக்கொடி கட்டினர். இதையொட்டி தொகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நகர் மற்றும் கிராம பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் ஊர்வலமாக சென்று கடைகளை அடைக்குமாறு தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதியிலும் கடைகள் மூடப்பட்டன. முள்ளோடை, குருவிநத்தம், சோரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட சாராயம், மதுக்கடைகளும் அடைக்கப்பட்டன.

கருப்புக்கொடியுடன் ஊர்வலம்

இந்தநிலையில் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து பாகூர் தூக்குபாலம் வரை தனவேலு மகன் அசோக் ஷிண்டே தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கருப்புக்கொடியுடன் ஊர்வலமாக வந்தனர். இதைப்பார்த்ததும் அங்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் இருந்த தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், தனசெல்வம், தன்வந்திரி, புருஷோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது திடீரென்று முதல்-அமைச்சரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அதை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதன்பின் 35-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி தவளக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் சந்திரசேகர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் வில்லியனூர் பைபாஸ் சாலை எம்.ஜி.ஆர். சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கும் முதல்- அமைச்சரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அதை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு அடுத்தடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

புதுவை ராஜா தியேட்டர் சிக்னல் அருகே அனைத்து சமூக இயக்கங்கள் சார்பிலும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

போலீசார் குவிப்பு

தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை இருந்து வருவதால் அசம்பாவிதம் சம்பவங்கள் நடைபெறாத வகையில் பாகூர் தொகுதி முழுவதும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்