கொரோனா தடுப்பு நடவடிக்கை: திசையன்விளையில் மீன், கருவாடு மார்க்கெட் இடமாற்றம் கலெக்டர் ஷில்பா நேரில் ஆய்வு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திசையன்விளையில் மீன், கருவாடு மார்க்கெட் நேற்று முதல் இடமாற்றம் செய்யப்பட்டது. இதனை கலெக்டர் ஷில்பா நேரில் ஆய்வு செய்தார்.
திசையன்விளை,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திசையன்விளையில் மீன், கருவாடு மார்க்கெட் நேற்று முதல் இடமாற்றம் செய்யப்பட்டது. இதனை கலெக்டர் ஷில்பா நேரில் ஆய்வு செய்தார்.
மீன் மார்க்கெட் இடமாற்றம்
நெல்லை மாவட்டம் திசையன்விளை நகரப்பஞ்சாயத்து பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து அந்த பகுதியில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தற்காலிகமாக நேரு திடல் அருகில் சாலை ஓரங்களில் மீன், கருவாடு கடைகள் இயங்கி வந்தது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் மீன், கருவாடுகளை வாங்க அதிகளவில் கூட்டம் கூடுவதால் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு மீன், கருவாடு மார்க்கெட்டை நாங்குநேரி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே தற்காலிகமாக இடமாற்றம் செய்ய நகரப்பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று மீன், கருவாடு மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
இந்த இடத்தை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகரப்பஞ்சாயத்தில் பதிவு செய்யாத மீன் வியாபாரிகளுக்கு அருகில் உள்ள இடத்தில் கூடுதலாக கடைகள் அமைத்து கொடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து திசையன்விளையில் நடந்து வரும் சுகாதார பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது திசையன்விளை தாசில்தார் பாஸ்கரன், கிராம நிர்வாக அலுவலர் ஐயாத்துரை, நகரப்பஞ்சாயத்து செயல் அலுவலர் ராஜா நம்பி கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் எட்வின் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.