கடன் வாங்கி தருவதாக நூதன மோசடி: லட்சக்கணக்கில் சுருட்டிய பெண் உள்பட 3 பேர் கைது
கடன்வாங்கி தருவதாக பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை நகரில் பொதுமக்களை எந்த ரூபத்திலாவது மோசடி வலையில் சிக்க வைத்து சிலர் லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்த மோசடி நபர்கள் கும்பலாக செயல்படுகிறார்கள். இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் போலியான ஒரு கால் சென்டரை தொடங்குவார்கள். அந்த கால்சென்டரில் அழகிய இளம்பெண்களை வேலைக்கு அமர்த்துவார்கள். அந்த இளம்பெண்கள் பொதுமக்களிடம் செல்போனில் இனிக்கும் வகையில் பேசுவார்கள். உங்களுக்கு குறைந்த வட்டிக்கு கடன் வேண்டுமா? நாங்கள் வாங்கி தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறுவார்கள். கடன் வாங்க விரும்பும் நபர்களிடம் முதல் கட்டமாக குறிப்பிட்ட தொகையை முன்பணமாக கட்ட சொல்வார்கள்.
இதுபோல் பொதுமக்களிடம் தொடர்பு கொண்டு பேசி லட்சக்கணக்கான பணத்தை முன்பணம் என்று வசூல் செய்து சுருட்டிக்கொண்டு, கடன் வாங்கி கொடுக்காமல், தங்களது கால் சென்டரையும் மூடிவிட்டு தப்பி ஓடிவிடுவார்கள். இது போன்ற ஒரு நூதன மோசடி கலாசாரம் சென்னையில் பெரிய அளவில் சமீபகாலமாக அரங்கேறி வருகிறது.
இதில் ஏமாந்த பொதுமக்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். இந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து செயல்பட்டனர். இந்த ஆண்டு மட்டும் இது தொடர்பாக 365 புகார்கள் பெறப்பட்டு 26 மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களில் முக்கிய குற்றவாளி பள்ளிக்கரணை செல்வகுமார் என்பவர் ஆவார். அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கூட்டாளியான சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் (வயது 38) என்பவரின் தலைமையில் புதிய மோசடிகுழு ஒன்று சென்னை பெருங்குடி மற்றும் திருவான்மியூர் பகுதியில் கால் சென்டர் தொடங்கி தற்போது மோசடியை அரங்கேற்றி வந்தனர்.
இந்த மோசடி குழுவை கைது செய்ய கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள்.
மோசடி கும்பல் தலைவன் தியாகராஜன் மற்றும் சைதாப்பேட்டையை சேர்ந்த கோபிநாத் (28), விழுப்புரத்தைச் சேர்ந்த மணிபாலா (22) என்ற பெண் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.