மாற்றுத்திறனாளி மகள் திருமணத்திற்காக சிறுக, சிறுக சேமித்த 35 ஆயிரம் ரூபாய் செல்லாத நோட்டுகளை மண்ணில் புதைத்து வைத்த பெண்

மாற்றுத்திறனாளி மகள் திருமணத்திற்காக கூலி வேலைக்கு சென்று சிறுக, சிறுக சேமித்த 35 ஆயிரத்து 500 ரூபாயை வீட்டின் பின்புறம் பெண் ஒருவர் புதைந்து வைத்திருந்தார்.

Update: 2020-07-11 00:45 GMT
கொள்ளிடம்,

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக அந்த நோட்டுகள் செல்லாமல் போய் விட்டதால் அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர வேண்டும் என்று சைகை மூலம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாதிரவேளூர் ஊராட்சி பட்டியமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை(வயது 58). கூலித்தொழிலாளி. இவரது மனைவி உஷா(52). இவர்களது மகள் விமலா(17). உஷாவும், விமலாவும் வாய்பேச முடியாத மற்றும் காது கேட்காத மாற்றுத்திறனாளிகள் ஆவர்.

நல்ல நிலையில் உள்ள தங்கள் பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக ஒவ்வொரு ஏழை தாயும் தனது பங்காக ஏதாவது சேமித்து வருவார். அந்த வகையில் மாற்றுத்திறனாளி மகளின் திருமணத்திற்காக உஷாவும் ஊரக வேலைக்கு சென்று அதன் மூலம் வந்த பணத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறுக, சிறுக சேமித்து வந்துள்ளார்.

முன்பெல்லாம் கிராமங்களில் தாய்மார்கள் அஞ்சறை பெட்டி, அரிசி பானைகளில் பணத்தை சேமித்து வைப்பார்கள். ஆனால் உஷாவோ இவ்வாறு சேமித்து வைத்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்து விட்டால் என்னசெய்வது என்று மற்றவர்களுக்கு தெரியாமல் தனது சேமிப்பு பணத்தை மறைத்து வைப்பது என்று முடிவு செய்தார்.

இதனையடுத்து இந்த நோட்டுகள் அனைத்தையும் ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து சுருட்டி, அதனுடன் ½ பவுன் தோட்டையும் வைத்து தனது வீட்டின் பின்புறம் பள்ளம் தோண்டி புதைத்து வைத்துள்ளார். 1000 ரூபாய் நோட்டுகள்-10, 500 ரூபாய் நோட்டுகள்-51 என மொத்தம் 35 ஆயிரத்து 500 ரூபாயை புதைத்து வைத்து இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி மத்திய அரசு பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இந்த செய்தி குறித்து உஷாவுக்கு எந்த விவரமும் தெரியவில்லை. இந்த நிலையில் ராஜதுரை தமிழக அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் தனக்கு வீடு ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அதன்படி அவருக்கு வீடு கட்டுவதற்கான ஒதுக்கீடு கிடைத்தது. இதனையடுத்து ராஜதுரைக்கு பசுமை வீடு கட்டும் பணிக்காக தொழிலாளர்கள், வீட்டின் பின்புறம் பள்ளம் தோண்டினர்.

அப்போது மண்ணுக்குள் இருந்து பிளாஸ்டிக் பை ஒன்று வெளியில் வந்தது. அதனை வெளியே எடுத்து பார்த்தபோது அந்த பையில் மத்திய அரசு செல்லாது என அறிவித்த பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் மொத்தம் 35 ஆயிரத்து 500 இருந்தது தெரிய வந்தது. அதை தொழிலாளர்கள் எடுத்து உஷாவிடம் கொடுத்தனர்.

அதை வாங்கிய உஷா, அந்த பணம் தனது மகள் திருமணத்திற்காக தான் பத்திரமாக சேர்த்து வைத்துள்ளதாக சைகை மூலம் அவர்களிடம் தெரிவித்துள்ளார். அதைக்கேட்ட தொழிலாளர்கள் இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு 4 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்து விட்டது என தெரிவித்ததும் உஷா அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் கண்ணீர் மல்க உஷா சைகை மூலம் கூறியது குறித்து கணவர் ராஜதுரை கூறியதாவது:-

எனது கணவருக்கு தெரியாமல் எனது மகள் திருமணத்திற்கு சேர்த்து வைத்த பணம் இது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற தகவல் எனக்கு தெரியாது. காதுகேளாத, வாய் பேச முடியாத எனக்கு இந்த தகவலை யாரும் சொல்லவில்லை. என்னிடம் இவ்வளவு பணம் இருப்பது எனது கணவருக்கே தெரியாது. எனது மகள் திருமணத்திற்கு என்ன செய்வது என தெரியவில்லை. தமிழக அரசு இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

செல்லாத நோட்டுகளை விவரம் தெரியாமல் உஷா சேர்த்து வைத்திருந்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர் நேரில் வந்து உஷாவுக்கு ஆறுதல் கூறினர். மேலும் தமிழக அரசு ஏழை மாற்றுத்திறனாளியான உஷாவின் மகள் திருமணத்திற்கு உதவிடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்