வழக்கு விசாரணையின்போது போலீசார் சட்டவிதிகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு ராஜன் அறிவுறுத்தல்

வழக்கு விசாரணையின்போது போலீசார் சட்டவிதிகளை சரியாக கடைபிடிக்கவேண்டும் என்று கலந்தாய்வு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜன் அறிவுறுத்தினார்.

Update: 2020-07-11 00:35 GMT
பென்னாகரம்,

வழக்கு விசாரணையின்போது போலீசார் சட்டவிதிகளை சரியாக கடைபிடிக்கவேண்டும் என்று கலந்தாய்வு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜன் அறிவுறுத்தினார்.

கலந்தாய்வு கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் போலீசார் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், பொதுமக்களையும், புகார் கொடுக்க வருபவர்களையும் நடத்த வேண்டிய விதம் குறித்து ஒவ்வொரு கோட்டத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பென்னாகரம் உட்கோட்டத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள், போலீசாருக்கான கலந்தாய்வு கூட்டம் பென்னாகரத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு மேகலா முன்னிலை வகித்தார். இதில் உட்கோட்டத்தை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் கலந்து கொண்டு போலீசார் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கண்காணிப்பு பணி

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் போலீஸ் நிலையங்களில் தேவையில்லாமல் பலர் கூடுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். போலீஸ் நிலையங்களில் புகார் மற்றும் விசாரணைக்கு தொடர்பில்லாத நபர்கள் நுழைவதை அனுமதிக்ககூடாது. அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். போலீஸ் நிலையங்களில் ஒரு குறிப்பிட்ட புகாரை கொடுக்க சம்பந்தப்பட்டவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். புகாரை பெற்றுக்கொண்டதற்கான சி.எஸ்.ஆர். பதிந்து விசாரிக்க வேண்டும். புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யும்போது புகார்தாரர், புகாருக்கு உள்ளானவர் ஆகிய 2 பேரை மட்டுமே அழைக்க வேண்டும்.

புகார்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால் அதுதொடர்பான விசாரணையின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். வழக்கு விசாரணையின்போது போலீசார் சட்ட விதிகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். பென்னாகரம் உட்கோட்ட பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீசார் கிருமிநாசினி, முககவசம் ஆகியவற்றை பயன்படுத்தி தங்களை தற்காத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ராஜன் பேசினார்.

மேலும் செய்திகள்