சென்னை புறநகருக்கு மதுபாட்டில்கள் கடத்தல் - 3 பேர் கைது
சென்னை புறநகருக்கு மதுபாட்டில்கள் கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் உத்தரவின் பேரில், கும்மிடிப்பூண்டியை அடுத்த தச்சூர் கூட்டுசாலையில் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்னை நோக்கி சென்ற 2 ஆட்டோ மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 2 ஆட்டோக்களில் மொத்தம் 74 மதுபாட்டில்கள் இருந்ததும், அவை சென்னை புறநகர் பகுதிக்கு கடத்தப்பட இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மதுபாட்டில்களை கடத்திய ஆட்டோ டிரைவர்களான மதுரவாயலை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 36) மற்றும் கொடுங்கையூரை சேர்ந்த ராஜேஷ் (32) ஆகிய 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த செங்குன்றத்தை சேர்ந்த ஆனந்தபாபு (25) என்பவர் 38 மதுபாட்டில்கள் கடத்தி வந்ததையும் போலீசார் கண்டறிந்தனர்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மது கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் 112 மதுபாட்டில்களுடன் 2 ஆட்டோக்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.