கொரோனா காலத்தில் கருங்கல்லில் உயிர்பெற்ற நாதஸ்வரம் தென்காசி சிற்பக்கலைஞர் சாதனை

கொரோனா காலத்தில் கருங்கல்லில் நாதஸ்வரம் உருவாக்கி தென்காசி சிற்பக்கலைஞர் சாதனை படைத்து உள்ளார்.

Update: 2020-07-10 23:00 GMT
தென்காசி, 

கொரோனா காலத்தில் கருங்கல்லில் நாதஸ்வரம் உருவாக்கி தென்காசி சிற்பக்கலைஞர் சாதனை படைத்து உள்ளார்.

ஆக்கப்பூர்வ முயற்சி

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பல்வேறு பாடங்களையும் மனிதர்களுக்கு கற்றுக் கொடுத்து இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு காரணமாக, காற்று, ஒலி மாசு குறைவு, நீர்நிலைகளில் தூய்மை அதிகரிப்பு போன்ற பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

மேலும் வீடுகளில் ஓய்வில் இருக்கும் பலர் ஓவியம் வரைவது, கதை எழுதுவது, சமையல் கலையில் ஈடுபடுவது என்று பல்வேறு ஆக்கப்பூர்வ முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தென்காசியை சேர்ந்த சிற்பக்கலைஞர் ஒருவரின் கைவண்ணம் மூலம் கருங்கல்லில் இருந்து நாதஸ்வரம் உயிர்பெற்று உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சிற்பக்கலைஞர்

தென்காசி அணைக்கரை தெருவை சேர்ந்தவர் காந்தி. இவருடைய மகன் மாரியப்பன் (வயது 35). இவர் கல்லில் எழில்மிகு சிற்பங்கள் உருவாக்கும் கலைஞர் ஆவார். தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன் குளம் பகுதியில் சிற்பக்கூடம் நடத்தி வருகிறார். அவருடன் தந்தை மற்றும் உறவினர்கள் 2 பேரும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் கோவில்களுக்கு சிற்பங்களை செய்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார்கள். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவில்களில் கும்பாபிஷேக பணிகள் நடத்த அனுமதி இல்லை. இதனால் அவர்கள் வேலை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

நாதஸ்வரம்

இந்த நிலையில் தான் மாரியப்பனுக்கு தற்போதைய ஓய்வு நேரத்தில் புதிதாக ஏதாவது செய்யலாமே என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவு, கருங்கல்லில் நாதஸ்வரத்தை அழகாக உருவாக்கி இருக்கிறார். பின்னர் அவர் தனது நண்பரான தென்காசி மலையான் தெருவை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் ராமச்சந்திரனை அழைத்து, கருங்கல் நாதஸ்வரத்தை காண்பித்தார். அதை அவர் வாசித்தபோது, இனிய ஓசை வந்தது. அவர் ஆச்சரியம் அடைந்தார்.

இதுகுறித்து மாரியப்பன் கூறியதாவது:-

இறைவன் கொடுத்த பாக்கியம்

நாங்கள் பரம்பரையாக சிற்பங்கள் செதுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இந்த சிற்பங்களை உருவாக்க கோவில்பட்டி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை, சுரண்டை அருகே உள்ள குலையநேரி ஆகிய இடங்களில் இருந்து கல் எடுக்கிறோம். தற்போது கொரோனாவால் தொழில் முடங்கி போய் விட்டது. திருச்செந்தூர் அருகே உள்ள ஒரு கோவிலுக்கு சிற்பங்கள் உருவாக்கி வைத்துள்ளோம். ஆனால், கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்கப்பட்டதால் அவற்றை அனுப்ப முடியவில்லை.

இப்படி வேலை இல்லாமல் இருக்கும் சூழ்நிலையில் ஏதாவது வித்தியாசமாக செய்யலாமே என்று எண்ணியபோது தான் கருங்கல்லில் நாதஸ்வரம் செய்யும் யோசனை தோன்றியது. இதற்கு எனது தந்தையும் உதவி செய்தார். இதனால் கருங்கல்லில் இருந்து அழகிய நாதஸ்வரம் உருவாகி உள்ளது. அதை எனது நண்பர் ராமச்சந்திரனிடம் கொடுத்து வாசிக்க சொன்னேன். அதில் எத்தனையோ பாடல்களை அவர் வாசித்தார். வழக்கமான நாதஸ்வரத்தை போன்று இதிலும் இனிய ஓசை வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதை இறைவன் எனக்கு கொடுத்த பாக்கியமாக கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்