தந்தை-மகன் கொலை வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தது சி.பி.சி.ஐ.டி. தூத்துக்குடியில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு ஆவணங்களை நேற்று தூத்துக்குடி வந்த சி.பி.ஐ. அதிகாரிகளிடம், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி,
சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.
தந்தை, மகன் சாவு
கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த வழக்கை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
சி.பி.ஐ.க்கு மாற்றம்
இந்த நிலையில் தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரை செய்தது. இதை ஏற்று புதுடெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 7-ந் தேதி மாலையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். இதில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் பதிவு செய்த 176(1-ஏ)(1) பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் கடந்த 19.6.2020 முதல் 22.6.2020 வரையிலான காலகட்டத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், கொலை செய்தல், தடயங்களை அழித்தல் போன்ற சந்தேகப்படும்படியான குற்றங்கள் நடந்து இருக்கலாம் என்றும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்து உள்ளனர்.
ஆவணங்கள் ஒப்படைப்பு
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக புதுடெல்லி சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அனுராக் சின்கா, பூரண்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுஷல்குமார் வர்மா, சச்சின், 2-ம் நிலை போலீஸ்காரர் அஜய்குமார், போலீஸ்காரர்கள் சைலேந்திரகுமார், பவன்குமார் திவேதி ஆகிய 8 பேர் அடங்கிய குழுவினர் புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் மதுரைக்கு வந்தனர்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு மாலை 4 மணிக்கு வந்தனர். அங்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்னிலையில், இந்த வழக்கு விசாரணை அதிகாரியான துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார், வழக்கு ஆவணங்களை சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லாவிடம் ஒப்படைத்தார்.
விசாரணை
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் வழக்கு தொடர்பாக சில தகவல்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்த விசாரணை ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், சாத்தான்குளம் போலீஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, கோவில்பட்டி ஜெயில் உள்ளிட்ட இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், தடயங்களை ஒவ்வொன்றாக பார்வையிட்டு சரிபார்த்தனர்.
வாக்குமூலங்களை ஒவ்வொரு பக்கமாக பார்த்து பதிவு செய்து கொண்டனர். இந்த பணி இரவு 9 மணி வரை நீடித்தது. மேலும், சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவம் நடந்த இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். அதேபோன்று கைது செய்யப்பட்ட 10 போலீசாரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக மதுரை கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் விரைவில் மனுதாக்கல் செய்ய உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.