ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் டாக்டர்கள் உள்பட 219 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 4,305 ஆக உயர்வு
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் டாக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 219 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 4,305 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்,
வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கட்டிப்பாட்டில் இயங்கும் தனிப்படையில் பணியாற்றும் தொரப்பாடியை சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறி காணப்பட்டது. அதையடுத்து அவரின் சளி மாதிரியை பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது நேற்று உறுதியானது.
அதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரின் குடும்பத்தினர், அவருடன் பணிபுரிந்த போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர்.
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை வளாகத்தில் தங்கி பணிபுரிந்து வந்த பெண் டாக்டர் மற்றும் அவருடைய ஒரு மாத பச்சிளம் குழந்தை கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அதேபோன்று மருத்துவமனையில் பணிபுரிந்த மேலும் 2 டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் உள்பட 15-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
வேலூர் சாய்நாதபுரத்தில் 2 மற்றும் 5 வயது ஆண் குழந்தைகள், கலாஸ்பாக்கத்தில் 5 வயது ஆண் குழந்தை, கஸ்பாவில் 6 வயது ஆண் குழந்தை, சாய்நாதபுரத்தில் 7 வயது ஆண் குழந்தை, அரியூரில் 10 வயது ஆண் குழந்தை, சர்கார் மண்டித்தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள், இடையன்சாத்தில் ஒரே குடும்பத்தில் 12 வயது சிறுமி உள்பட 2 பேர், எம்.பி.எஸ்.நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர், சங்கரன்பாளையத்தில் 82 வயது முதியவர் உள்பட மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 169 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 169 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,467 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு 1,462 ஆக உயர்ந்துள்ளது. இதில் 743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 15 ஆயிரத்து 251 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 1,235 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 1,617 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அனைத்து பகுதிகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. நேற்று ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 376 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் நேற்று 5 வயது சிறுவன் உள்பட 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது.