அறிமுகமில்லாத நபர்களுக்கு மின்னஞ்சல், செல்போன் அழைப்புகள் மூலம் வங்கி கணக்கு விவரங்களை அளிக்க வேண்டாம்
விழுப்புரம் மாவட்டத்தில் அறிமுகமில்லாத நபர்களுக்கு மின்னஞ்சல், செல்போன் அழைப்புகள் மூலம் வங்கி கணக்கு விவரங்களை அளிக்க வேண்டாம்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் அறிமுகமில்லாத நபர்களுக்கு மின்னஞ்சல், செல்போன் அழைப்புகள் மூலம் வங்கி கணக்கு விவரங்களை அளிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆன்-லைன் மூலம் மோசடி
ஏதேனும் ஒரு மாநிலத்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனத்தின் பெயரை தனிப்பட்ட நபரின் மின்னஞ்சல் முகவரியில் இருந்தோ அல்லது செல்போனில் குறுஞ்செய்தியாகவோ வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றி ஆன்-லைன் மூலம் பணம் பறித்து வருகின்றனர்.
அதுபோல் விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடைய செல்போனை தொடர்பு கொண்டு கல்லூரியில் 3-ம் ஆண்டு படிப்பை முடித்தவுடன் தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளம் கொடுப்பதாகவும், இணையதள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பியதும் நேரடி தேர்வு நடத்தி அண்ணா நகரில் 6 மாதம் பயிற்சி கொடுத்து அதிக சம்பளம் கொடுப்பதாக கூறியுள்ளனர். இதனை நம்பி அம்மாணவி இணையதள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பியுள்ளார்.
பின்னர் அந்த நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி மாணவியை தொடர்பு கொண்டு, உங்கள் விண்ணப்பத்திற்கு பதிவு கட்டணமாக ரூ.2 ஆயிரம் அனுப்ப வேண்டும் எனக்கூறி அவரது ஏ.டி.எம். அட்டையில் 16 இலக்க எண்களை பெற்றும், பின்னர் வங்கியில் இருந்து மாணவியின் செல்போனுக்கு அனுப்பப்பட்ட ஒருமுறை கடவுச்சொல் பெற்று அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.12 ஆயிரத்தை மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுபோன்று யாரேனும் தொடர்பு கொண்டால் உங்கள் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். எண் மற்றும் வங்கியில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு முறை கடவுச்சொல் எண்ணை தெரிவிக்கக் கூடாது.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
மேலும் எந்த ஒரு வங்கியில் இருந்தும், வாடிக்கையாளர்களின் தனிநபர் வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட விவரங்களை ஒருபோதும் கேட்க மாட்டார்கள். எனவே ஏ.டி.எம். மற்றும் டெபிட் கார்டு எண்கள் மற்றும் உள்நுழைவு கடவுச்சொல் அல்லது வங்கி கணக்கு எண் போன்ற முக்கிய விவரங்களை மின்னஞ்சல், செல்போன் அழைப்புகள் மூலம் அறிமுகமில்லாத நபர்களுக்கு அளிக்க வேண்டாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.