சேலம் கந்தம்பட்டி பைபாசில் ரூ.33 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம்: எடப்பாடி பழனிசாமி 15-ந் தேதி திறந்து வைக்கிறார்
சேலம் கந்தம்பட்டி பைபாசில் ரூ.33 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை வருகிற 15-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
சேலம்,
சேலம் மாநகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு பகுதிகளில் புதிய மேம்பாலங்களை கட்டி முடித்து அதனை திறந்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். இதனால் தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் சேலத்தில் மிக நீளமான ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் எங்கு பார்த்தாலும் மேம்பாலங்களாக காட்சியளிப்பதால் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சேலம் செவ்வாய்பேட்டையில் இருந்து இளம்பிள்ளைக்கு செல்லும் கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாகவும், இதனால் விபத்து ஏற்பட்டு உயிர்பலி நடப்பதாகவும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதைத்தொடர்ந்து அப்பகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அங்கு ரூ.33 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது., இதையடுத்து கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. இந்த மேம்பாலம் திறப்பு விழா வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய பாலத்தை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இந்த விழாவில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் பேளூ -கிளாக்காடு இடையே ரூ.3 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இந்த புதிய மேம்பாலம் திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 14-ந் தேதி பிற்பகல் சென்னையில் இருந்து கார் மூலமாக சேலம் வருகிறார்.
தொடர்ந்து அவர் வருகிற 15-ந் தேதி சேலம் கந்தம்பட்டி பைபாசில் அமைந்துள்ள புதிய மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். மேலும் 16 மற்றும் 17-ந் தேதிகளில் சேலத்தில் தங்கியிருக்கும் முதல்-அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மேம்பாலம் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இந்த புதிய பாலம் திறக்கப்பட்டால் சேலம் சிவதாபுரம், பனங்காடு, சித்தர்கோவில், இளம்பிள்ளை, இரும்பாலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் எந்தவித இடையூறுமின்றி குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வசதியாக அமையும் என்பதால் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.