நான்கு வழிச்சாலை பணிகள் அடுத்த ஆண்டு முடியும் வசந்தகுமார் எம்.பி. தகவல்

நான்கு வழிச்சாலை பணிகள் அடுத்த ஆண்டு முடியும் என்று வசந்தகுமார் எம்.பி. கூறினார்.

Update: 2020-07-09 23:00 GMT
நாகர்கோவில்,

நான்கு வழிச்சாலை பணிகள் அடுத்த ஆண்டு முடியும் என்று வசந்தகுமார் எம்.பி. கூறினார்.

நான்கு வழிச்சாலை

கன்னியாகுமரி மற்றும் காவல் கிணற்றிலிருந்து களியக்காவிளை வரை நான்கு வழி சாலை பணிகள் ரூ.1,700 கோடி மதிப்பில் 70 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து வருகிறது.

இந்த பணிகள் தற்போது 70 சதவீதம் முடிவடைந்து உள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நேற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். களியக்காவிளை முதல் நாகர்கோவில் ஒழுகினசேரி வரை இந்த ஆய்வு பணி நடந்தது.

அதன் பின்னர் வசந்தகுமார் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

அடுத்த ஆண்டு முடியும்

நான்கு வழிச்சாலை பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளது, பாசன குளங்கள் மீது மண்கொண்டு நிரப்பாமல் இந்த சாலை உருவாக்கப்பட உள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப் படாது. முக்கிய பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

வருகிற 2021-ம் ஆண்டு இறுதியில் இந்த பணிகள் அனைத்தையும் முடிக்க உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். எனவே அடுத்த ஆண்டுக்குள் பணி முடியும். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை முதல் காவல் கிணறு வரையிலான நான்குவழி சாலை பணிகளை பார்வையிட்ட பின்னர் குளங்கள் மற்றும் நீர் ஆதாரங்களை அழித்து விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்து கூடுதலாக ரூ.550 கோடி நிதியை பெற்றுக் கொடுத்து அப்பகுதிகளில் பாலங்கள் அமைக்க வழிவகை செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்