பெங்களூருவில் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை 8 மண்டலங்களின் பொறுப்பாளர்களாக 8 மந்திரிகள்-ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

8 மண்டலங்களின் பொறுப்பாளர்களாக 8 மந்திரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் முடிவு.

Update: 2020-07-09 23:30 GMT

பெங்களூரு,

ஜூலை.10-

இந்திய அளவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.

கர்நாடக அரசு அதிர்ச்சி

நேற்று ஒரே நாளில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. மேலும் கொரோனாவுக்கு தினசரி 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகிறார்கள். இதனால் இதுவரை மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கர்நாடகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் பாதிப்பு நாள்தோறும் ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. நகரில் அனைத்து பகுதியிலும் வைரஸ் பரவியுள்ளது. மரண விகிதமும் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 54 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கியுள்ளது.

8 மந்திரிகளை நியமிக்க முடிவு

இதனால் கர்நாடக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த வைரசை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பெங்களூருவில் வைரசால் பாதிக்கப்படும் நபர்களுக்கு எப்படி பாதிப்பு வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் திணறி வருகிறார்கள். புதிதாக கொரோனாவால் பாதிக்கும் நபர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் படுக்கை கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

மேலும் கொரோனா நோயாளிகளை அழைத்து செல்வதற்கு தேவையான ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையும் பற்றாக்குறையாக உள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாநகராட்சியில் உள்ள 8 மண்டலங்களுக்கு தலா ஒரு மந்திரி வீதம் 8 மந்திரிகளை நியமிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் நேற்று முடிவு எடுக்கப்பட்டது. மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

பிராணவாயு தடையின்றி...

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதுவும் பெங்களூருவில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த வைரசை கட்டுப்படுத்த பெங்களூருவில் உள்ள 8 மண்டலங்களுக்கும் தலா ஒரு மந்திரி வீதம் 8 மந்திரிகளை நியமிக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. எந்தெந்த மண்டலத்திற்கு எந்த மந்திரி என்பதை முதல்-மந்திரி அறிவிப்பார். அத்துடன் முதல்-மந்திரியின் அரசியல் செயலாளர் எஸ்.ஆர்.விஸ்வநாத்தும் இந்த பணிக்கு நியமிக்கப்படுகிறார்.

பெங்களூரு தவிர பிற மாவட்டங்கள் மற்றும் தாலுகாக்களில் உள்ள கொரோனா ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அங்கு பிராண வாயு (ஆக்சிஜன்) தடையின்றி அதிகமாக கிடைக்க செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. மொத்தத்தில் கொரோனா தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மந்திரி மாதுசாமி கூறினார்.

முடிவு எடுக்கவில்லை

கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் ஞாயிறு ஊரடங்குடன் சனிக்கிழமையும் ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு எடுக்கும் என்று தகவல் வெளியாகி இருந்தது. அதுபற்றி மந்திரிசபையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் நியமனம்

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள 8 மண்டலங்களுக்கு தலா ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை கர்நாடக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு கிழக்கு மண்டலத்திற்கு துஷார் கிரிநாத், பெங்களூரு மேற்கு மண்டலத்திற்கு ராஜேந்திரகுமார் கட்டாரியா, பொம்மனஹள்ளி மண்டலத்திற்கு மணிவண்ணன், எலகங்கா மண்டலத்திற்கு நவீன்ராஜ்சிங், பெங்களூரு தெற்கு மண்டலத்திற்கு முனீஷ்மவுத்கல், மகாதேவபுரா மண்டலத்திற்கு என்.மஞ்சுளா, தாசரஹள்ளி மண்டலத்திற்கு பி.சி.ஜாபர், ராஜராஜேஸ்வரி மண்டலத்திற்கு ஆர்.விஷால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் பிறப்பித்துள்ளார்.

பெங்களூரு மாநகராட்சி கமிஷனரின் மேற்பார்வையில் இந்த அதிகாரிகள் செயல்படுவார்கள். இவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்