புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கு கொரோனா தொற்று இல்லை

புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

Update: 2020-07-09 07:09 GMT
புதுச்சேரி,

புதுவையில் தொடக்கத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. தொற்று பரிசோதனையில் முதல் 50 நாட்கள் வரை 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர். பல்வேறு தளர்வுகளுடன் 5-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு கொரோனா வைரஸ் தொற்றுவேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது.

அடித்தட்டு மக்கள் முதல் டாக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், போலீசார் என பலரும் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே முதல்-அமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு தொற்று பரவியதால் முதல்-அமைச்சர் அலுவலகம் மூடப்பட்டது. அமைச்சரின் அலுவலக ஊழியர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து சட்டசபை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 2 நாட்களுக்கு சட்டசபை மூடப்பட்டு அதன்பிறகு வழக்கம்போல் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கவர்னர் மாளிகையில் பணிபுரியும் கடைநிலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆளுநர் அலுவலகம் 2 நாட்கள் மூடப்பட்டது. ஆளுநர் கிரண் பேடிக்கும் கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆளுநர் கிரண் பேடிக்கு கொரோனா தொற்று இல்லை  என்ற முடிவுகள் வெளிவந்துள்ளது.

மேலும் செய்திகள்