சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? பேக்கரிகளில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என்று பேக்கரி மற்றும் இறைச்சி கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2020-07-09 04:41 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், இறைச்சிக்கடைகள், வார சந்தை கடைகள், நெடுஞ்சாலையோர உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் கொரோனா பரவாமல் தடுப்பது தொடர்பாக கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பாலமுருகன், சதீஷ்குமார் ஆகியோர் அவினாசி வட்டாரங்களில் ஆய்வு செய்தனர்.

ஓட்டல்கள், இறைச்சி கடைகள்,வாரச்சந்தை கடைகள், நெடுஞ்சாலை உணவகங்கள், பேக்கரிகள் என 50 கடைகளில் ஆய்வு செய்தனர். இதுபோல் மாவட்டம் முழுவதும் இதுவரை 664 உணவகங்கள், பேக்கரிகள், மளிகை கடைகளில் சமூக இடைவெளி கடை பிடிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர்.

விழிப்புணர்வு நோட்டீஸ்

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டிலேயே இருக்க வேண்டும். மருத்துவம் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். அனைத்து கடைகளிலும் தனிநபர் இடைவெளி 6 அடியை பின்பற்ற வேண்டும். பணியாளர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும்.

பொதுஇடங்களில் தும்மும்போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். அவற்றை முறையாக அகற்ற வேண்டும். பொதுஇடங்களில் எச்சில் துப்புவதை தவிர்க்க வேண்டும். கடைகளில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு நோட்டீசுகளை ஒட்ட வேண்டும். கடைக்கு கூடுதலாக வரும் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் வகையில் இருக்கையுடன் தனி அறை அமைக்க வேண்டும்.

பொருட்களை தொடஅனுமதிக்கக்கூடாது

தரைத்தளம், கதவு, கைப்பிடிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

வாடிக்கையாளர்கள் கடைக்குள் நுழைவதற்கு முன்பு வெப்பமானியை கொண்டு உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும்.

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பேக்கரிகளுக்கு வரக்கூடாது. உணவு பண்டங்களை வாடிக்கையாளர்கள் தொடுவதற்கு அனுமதிக்க கூடாது என்றும், இவற்றை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்