காங்கேயம் மின்வாரிய அதிகாரி உள்பட 8 பேருக்கு கொரோனா

காங்கேயம் மின்வாரிய அதிகாரி உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-07-09 04:39 GMT
காங்கேயம், 

காங்கேயம் சென்னிமலை ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த 58 வயது மதிக்கத்தக்க மின்வாரிய அதிகாரி ஒருவர் நிர்வாக மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியின் காரணமாக தனது சொந்த ஊரான மேட்டூரிலிருந்து தினசரி காங்கேயம் வந்து வேலை பார்த்துவிட்டு சென்று வருகிறார்.

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால் மேட்டூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதையடுத்து மேட்டூரில் உள்ள அவரது வீட்டிலிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். அங்குள்ள கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

குண்டடத்தை அடுத்துள்ள நந்தவனம்பாளையத்தை சேர்ந்த 60 வயதுடைய தொழிலாளி ஒருவர் சிறுநீர்ப்பாதை அறுவை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அறுவை சிகிச்சை என்பதால் அங்கு அவருக்கு கொரோனாபரிசோதனை எடுக்கப்பட்டது. நேற்று முடிவு வெளியானதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

டாஸ்மாக் விற்பனையாளர்

திருப்பூர் முத்தணம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் 38 வயது உடைய ஒருவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மதுரை அருகே உள்ள சொந்த ஊருக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை எடுத்துள்ளார். அதன் பிறகு வழக்கம் போல் டாஸ்மாக் கடைக்கு வேலைக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை கொரோனா பரிசோதனை முடிவு தெரியவந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்தது. இதையடுத்து அவர் திருப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் வேலை பார்த்த டாஸ் மாக் கடையை மூடுவதற்கு சுகாதாரத்துறையினர் உத்தரவிட்டனர். அந்த விற்பனையாளர் வசித்து வரும் விஜயாபுரம் பகுதியில் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி தெளித்தனர்.

அவினாசி

அவினாசி கிழக்கு ரதவீதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஒரு பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் அவினாசி மகாராஜா கல்லூரிக்கு பின்புறம் உள்ள வீடுகளில் தங்கி நியூ திருப்பூர் பகுதியில உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காதிருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிககப்பட்டுள்ளனர். எனவே கிழக்கு ரதவீதியில் செயல்பட்டுவரும் மருத்துவமனை, நகைகடைகள், ஜவுளி கடைகள், ஸ்வீட் ஸ்டால், சலூன் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு போக்குவரத்து வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது. கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அவினாசியில் உள்ள வியாபாரிகள், மற்றும் பொதுமக்களுக்கு நோய்தொற்று பரவாமல் இருப்பதற்காக வணிக நிறுவனங்கள் செயல்படும் நேரம் குறைப்பது குறித்து இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு அவினாசி பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், ஓட்டல், பேக்கரி, நகை கடை, ஜவுளி கடை, காய்கறி கடை உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனத்தினர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குமாறு பேரூராட்சி நிர்வாகத் தினர் அறிவுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்