கொரோனா வேகமாக பரவுவதை தடுக்க காய்ச்சல் இருந்தாலே வீட்டிற்கு தடுப்பு மாநகராட்சி நடவடிக்கை பலன் தருமா?

கொரோனா வேகமாக பரவுவதை தடுக்க காய்ச்சல் இருந்தாலே வீட்டிற்கு தடுப்பு போடும் நடவடிக்கையை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

Update: 2020-07-09 01:24 GMT
மதுரை,

மதுரை மாநகரில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனாவின் வேகம் மின்னல் வேகத்தில் இருக்கிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 2 ஆயிரத்து 356 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே இன்னும் தொற்று பரவாமல் இருக்க மாநகராட்சி சார்பில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நகரில் உள்ள 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 16 நடமாடும் மருத்துவ வாகனங்கள், 20 முகாம்கள், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மற்றும் மருந்தகங்கள், சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம்கள் என 155 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் காய்ச்சல் இருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டால் உடனடியாக அவர்களது வீடுகள் தடுப்பு போட்டு தனிமைப்படுத்தப்படுகிறது. 3 நாட்களுக்கு பிறகும் அவர்களுக்கு காய்ச்சல் இருக்கும்பட்சத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல் இல்லாவிட்டால் மட்டுமே இந்த தடுப்புகள் அகற்றப்படுகிறது.

நடவடிக்கை

மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் தொடக்கத்திலேயே கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மற்றவர்களுக்கு நோய் தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சாதாரண காய்ச்சல் இருந்தால் கூட வீட்டில் தடுப்பு அமைப்பது சரியாக இருக்குமா? காய்ச்சல் என்றால் தடுப்பு போட்டு விடுவார்கள் என்ற அச்சத்தால் மக்கள் முகாமில் எப்படி கலந்து கொள்வார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு குறையும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கிடையில் மதுரை நகர் பகுதியில் நடந்து வரும் காய்ச்சல் முகாமினை கமிஷனர் விசாகன் தலைமையில் கலெக்டர் வினய் நேற்று ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

அப்போது அவர்கள் ஆழ்வார்புரம், வண்டியூர் மானகிரி, புதூர் மண்மலை மேடு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமில் காய்ச்சல் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, சளி மாதிரி பரிசோதனை செய்யப்படுவதை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கலெக்டர் வினய், பொதுமக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக மாதிரி பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெறுவது குறித்து ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது நகர்நல அலுவலர் குமரகுருபரன், மருத்துவ கண்காணிப்பாளர் இஸ்மாயில் பாத்திமா, சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார ஆய்வாளர்கள் கவிதா, ஓம்சக்தி, மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்