ஊரடங்கு விதிமுறையை மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

ஊரடங்கு விதிமுறையை மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை நகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா கூறியுள்ளார்.

Update: 2020-07-09 01:06 GMT
மதுரை, 

மதுரை நகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை நகரில் கொரோனா தொற்று நோய் தீவிரமாக பரவுவதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசால் வருகிற 12-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த மதுரை மக்களின் ஒத்துழைப்பு முக்கியமானது. அதன்படி அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் பொதுமக்கள் வெளி இடங்களில் நடமாட வேண்டாம்.

மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வர வேண்டும். அவ்வாறு வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

மேலும் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை தாங்கள் வசிப்பிடங்களுக்கு அருகாமையில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் மட்டுமே நடந்து சென்று வாங்கி செல்லுமாறும், அவ்வாறு இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வாகனங்களில் நீண்ட தூரம் சென்றாலோ, வீதிமீறல்களில் ஈடுபட்டாலோ காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

ஊரடங்கு முடியும் வரை இந்த விதிமுறை தீவிரமாக அமல்படுத்தப்படும். எனவே பொதுமக்கள் விதிமுறைகளை தவறாது பின்பற்றி மதுரை நகரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்