விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-08 23:48 GMT
விழுப்புரம், 

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா

உலகையே அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ், தமிழகத்தில் தற்போது மின்னல் வேகத்திலும், அதிதீவிரமாகவும் பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் தினமும் புதிய உச்சத்தை தொட்டு மக்களை பதைபதைக்க வைக்கிறது. அதுபோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,233 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 18 பேர் இறந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று 300-க்கும் மேற்பட்டோரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் 70 ஆண்கள், 36 பெண்கள் என மேலும் 106 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

1,339 ஆக உயர்வு

இவர்களில் விழுப்புரத்தை சேர்ந்த 56 வயதுடைய அரசு பள்ளி ஆசிரியர், திண்டிவனத்தை சேர்ந்த 48 வயதுடைய போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், விழுப்புரத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் போலீஸ், திண்டிவனத்தை சேர்ந்த 52 வயதுடைய தனியார் பஸ் டிரைவர், விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வரும் 40 வயதுடைய நபரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,339 ஆக உயர்ந்துள்ளது.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,379 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று சிலரது உமிழ்நீர் பரிசோதனை முடிவு வந்தது. இதில் 71 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இவர்களில் கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் 6 டாக்டர்கள், 6 செவிலியர்கள், ஒரு மருத்துவமனை ஊழியர், 2 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதேபோல் சிதம்பரம், கம்மாபுரம், கிருஷ்ணாபுரம், கடலூர், பண்ருட்டியை சேர்ந்த 5 கர்ப்பிணிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,450 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,274 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று 150 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1274-ல் இருந்து 1,285 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்