2 ரவுடிகள் கொலையில் கைது செய்யப்பட்ட 6 பேர் சிறையில் அடைப்பு 2 சிறுவர்கள் சிறார் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்

வில்லியனூர் அருகே 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2020-07-08 22:15 GMT
வில்லியனூர், 

வில்லியனூர் அருகே 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2 சிறுவர்கள் சிறார் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

2 ரவுடிகள் கொலை

வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண் என்கிற அருண்குமார் (வயது 26). இவருக்கும், தமிழக பகுதியான வழுதாவூரை சேர்ந்த முகிலன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 2-ந் தேதி அருண்குமாரை கொலை செய்வதற்காக முகிலன், அவரது தம்பி முரளி (20), கொடாத்தூர் சந்துரு (20) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் பிள்ளையார்குப்பம் கிராமத்துக்கு வந்து, ஆயுதங்களை காட்டி ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை கிராம மக்கள் சுற்றிவளைத்தனர். இதில் ரவுடிகளான முரளி, சந்துரு இருவரும் சிக்கிக்கொண்டனர். முகிலன் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த அருண்குமார் மற்றும் அவருடைய கூட்டாளிகள் கிராம மக்களிடம் சிக்கிய முரளி, சந்துருவை உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்து, உதைத்தனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.

8 பேர் கைது

இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அருண்குமார் மற்றும் அவருடைய கூட்டாளிகள் பிரேம்நாத் (25), சிலம்புசெல்வன் (23) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய பிள்ளையார்குப்பம் முத்துராமன் (24), வெற்றிவேல் (22), வழுதாவூர் சுரேஷ் (21) மற்றும் 18 வயதுக்குட்பட்ட 2 சிறுவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் அரசு வழிகாட்டுதலின்படி கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு நேற்று தெரியவந்தது. இதில் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

இதையடுத்து 2 சிறுவர்கள் உள்பட 8 பேரும் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவுப்படி அருண்குமார் உள்பட 6 பேரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 2 சிறுவர்கள் அரியாங்குப்பத்தில் உள்ள சிறார் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்