சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகள் மூடப்படும் கவர்னர் கிரண்பெடி எச்சரிக்கை
சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கடைகள் மூடப்படும் என்று கவர்னர் கிரண்பெடி எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி,
சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கடைகள் மூடப்படும் என்று கவர்னர் கிரண்பெடி எச்சரித்துள்ளார்.
கொரோனா தொற்று
கவர்னர் கிரண்பெடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக குற்றவழக்குகள் அதிகரிப்பதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்கும் போது கடைகள் விழிப்புணர்வின்றி செயல்பட்டு வருவதாக தெரிகிறது. கடைகள், மார்க்கெட்டுகள் போன்றவை தொற்று நோய்களுக்கான மையமாக மாறி வருகிறது. கடை வைத்து இருப்பவர்களும், அவர்கள் இணைந்து இருக்கும் சங்கங்களும் சேர்ந்து அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கடைகள் மூடப்படும்
மேலும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உங்களுடைய சேவை அளிக்கப்படும் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தவும். இந்த பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத கடைகள் அரைநாள் மூடப்பட்டு பேரழிவு மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படலாம். இது மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளவும்.
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 70 புதிய நபர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். விரைவில் இந்த பரவல் 100 நபர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது. எனவே வருமுன் காப்பதே சிறந்தது. தயவு செய்து கொரோனா தொற்று பரவலை தடுக்க ஒத்துழைக்கவும். நம் அனைவருடைய ஒருங்கிணைந்த செயல்பாடுகளால் மட்டுமே இதைக் கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.