ஊழியருக்கு தொற்று எதிரொலி புதுவையில் கவர்னர் மாளிகை மூடல் கிரண்பெடிக்கு மருத்துவ பரிசோதனை

புதுவையில் ஊழியருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து கவர்னர் மாளிகை மூடப்பட்டது.

Update: 2020-07-09 00:00 GMT
புதுச்சேரி, 

புதுவையில் தொடக் கத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருந்தது.

ஊழியருக்கு கொரோனா

தொற்று பரிசோதனையில் முதல் 50 நாட்கள் வரை 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர். பல்வேறு தளர்வுகளுடன் 5-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு கொரோனா வைரஸ் தொற்றுவேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது.

அடித்தட்டு மக்கள் முதல் டாக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், போலீசார் என பலரும் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே முதல்-அமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு தொற்று பரவியதால் முதல்-அமைச்சர் அலுவலகம் மூடப்பட்டது. அமைச்சரின் அலுவலக ஊழியர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து சட்டசபை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 2 நாட்களுக்கு சட்டசபை மூடப்பட்டு அதன்பிறகு வழக்கம்போல் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கவர்னர் மாளிகையில் பணிபுரியும் கடைநிலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

2 நாட்கள் மூடல்

உடனே சுகாதார துறை ஊழியர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். தொற்று பாதித்த ஊழியருடன் பணிபுரிந்த 15 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு நேற்று தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர் பணிபுரிந்த அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து இழுத்து மூடப்பட்டது.

அதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி மற்றும் கவர்னர் மாளிகையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது. இதையொட்டி 2 நாட்கள் ராஜ் நிவாஸ் மூடப்படுவதாக கவர்னர் மாளிகை அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவர்னர் கிரண்பெடி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்ச பாதிப்பு

இதுவரை புதுச்சேரியில் உச்சபட்சமாக ஒரேநாளில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆக இருந்து வந்தது. தற்போது இதை முறியடிக்கும் வகையில் நேற்று ஒரே நாளில் கவர்னர் மாளிகை ஊழியர் உள்பட 112 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இது அதிகபட்ச பாதிப்பு ஆகும். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

புதுவையில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 72 பேரும், ஜிப்மரில் 7 பேரும், காரைக்காலில் 25 பேரும், ஏனாமில் 8 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 62 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

1,151 பேருக்கு தொற்று

புதுவை மாநிலத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 1,151 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 553 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 584 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது புதுச்சேரியில் 493 பேரும், காரைக்காலில் 33 பேரும், ஏனாமில் 20 பேரும், மாகியில் 7 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 21,865 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 447 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்