ஊத்துக்குளி அருகே கர்ப்பிணிக்கு கொரோனா வீட்டின் அருகில் உள்ள 100 பேருக்கு பரிசோதனை
ஊத்துக்குளி அருகேகர்ப்பிணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
ஊத்துக்குளி,
ஊத்துக்குளி அருகே உள்ள நடுப்பட்டி ஊராட்சி பல்லகவுண்டன்பாளையம், இந்திராநகரில் குடியிருந்து வரும் 28 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது கணவர் திருப்பூரில் டிரைவராக பணிபுரிந்து வரும் நிலையில் 4 மாத கர்ப்பிணியான அவர் கர்ப்ப காலம் முதல் திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சில தினங்களாக உடல் நிலை சரி இல்லாமல் அடிக்கடி வாந்தி ஏற்பட்டதன் காரணமாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவு நேற்று வெளிவந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்தது.
100 பேருக்கு பரிசோதனை
இதனையடுத்து அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து குன்னத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் அவர் வீடு அமைந்துள்ள இந்திரா நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
மேலும் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் அப்பகுதிக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்திரா நகர் குடியிருப்பு பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டன.